டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு 8 ஆயிரத்து 527 பேர் எழுதினர்


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு 8 ஆயிரத்து 527 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 3 March 2019 11:39 PM GMT (Updated: 2019-03-04T05:09:25+05:30)

நெல்லை மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை 8 ஆயிரத்து 527 பேர் எழுதினார்கள்.

நெல்லை, 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்படுகின்ற குரூப்-1 பணிக்கான முதல் நிலை எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது.

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி, ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி, கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி, ரோஸ்மேரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, மேக்தலின் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, அரசு சட்டக்கல்லூரி, சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்பட 36 மையங்களில் நடந்தது. இந்த 36 மையங்களில் 11 ஆயிரத்து 901 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 8 ஆயிரத்து 527 பேர் தேர்வு எழுதினார்கள். 3 ஆயிரத்து 374 பேர் தேர்வு எழுத வரவில்லை.

பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை கலெக்டர் ஷில்பா பார்வையிட்டார். இதுகுறித்து கலெக்டர் ஷில்பா கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடந்த குரூப்-1 பணிக்கான முதல்நிலை எழுத்து தேர்வு நெல்லை மாவட்டத்தில் 36 மையங்களில் நடந்தது. இந்த தேர்வை கண்காணிக்க தாசில்தார், துணை தாசில்தார் நிலையில் 9 சுற்றுக்குழு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வு முழுவதும் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. தேர்வு மையங்களுக்கு குடிநீர், மின்சார வசதி செய்யப்பட்டு இருந்தது. தேர்வு மையத்திற்கு நெல்லை பஸ்நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story