பாப்பாரப்பட்டியில் ரூ.1.50 கோடியில் பாரதமாதா நினைவாலயம் அமைச்சர் கே.பி.அன்பழகன் பணியை தொடங்கி வைத்தார்
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் ரூ.1.50 கோடி மதிப்பில் பாரதமாதா நினைவாலயம் அமைக்கும் பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
பாப்பாரப்பட்டி,
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் அமைந்துள்ள வளாகத்தில் அவருடைய கனவினை நனவாக்கும் வகையில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ரூ.1.50 கோடி மதிப்பில் நூலகத்துடன் கூடிய பாரத மாதா நினைவாலயம் அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பாரதமாதா நினைவாலயம் அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் கூறுகையில், சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் கனவை நிறைவேற்றும் வகையில் பாரத மாதா நினைவாலயம் கட்டுவதற்கான பணிக்கு தற்போது அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ரூ.1.50 கோடி மதிப்பில் பாரத மாத நினைவாலயம் அமைக்கும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. இங்கு நூலகம் மற்றும் பாரதமாதா வெண்கலச்சிலை 7.5 அடி உயரத்தில் அமைக்கப்படும். மேலும் 3.25 அடி உயரத்தில் வெண்கலத்திலான சிங்கம் சிலை ஒன்றும் நிறுவப்படும். சுப்பிரமணிய சிவா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு முயற்சிகள் மேற்கொள்ளும் என்று கூறினார்.
முன்னதாக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த அவசர கால தாய்–சேய் பராமரிப்பு மையத்தை மேம்படுத்துவதற்கான கட்டிடம் கட்டும் பணி, அரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி, கீரைப்பட்டி கிராமத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும்பணி என மொத்தம் ரூ.11.70 கோடி மதிப்பிலான பணிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதேபோல் பென்னாகரம் தாலுகா ஏரியூரில் ரூ.3.50 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி, மாங்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.5 கோடி மதிப்பில் 10 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளையும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்த விழாக்களில் மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், உதவி கலெக்டர் சிவன்அருள், மருத்துவக்கல்லூரி முதல்வர் சீனிவாசராஜூ, தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மதியழகன், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் பொன்னுவேல், கோவிந்தசாமி, சிவபிரகாசம், வேலுமணி, ஆறுமுகம், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தியாகராஜன், தாசில்தார் ரேவதி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.