ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்களுக்கு ரூ.3¼ கோடியில் தங்கும் விடுதி


ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்களுக்கு  ரூ.3¼ கோடியில் தங்கும் விடுதி
x
தினத்தந்தி 4 March 2019 11:00 PM GMT (Updated: 2019-03-04T20:23:38+05:30)

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்களுக்கு ரூ.3¼ கோடி மதிப்பிலான தங்கும் விடுதிகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் விடுதியில் தங்கி படிக்கிறார்கள். இந்த மருத்துவ கல்லூரியில் ஆண்டு தோறும் 100 மாணவ–மாணவிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த மாணவர் சேர்க்கையை 100–ல் இருந்து 150 ஆக உயர்த்த வேண்டும் என்று மாணவ–மாணவிகள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக 50 மாணவர்களை சேர்ப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது கூடுதல் கட்டிடங்கள், வகுப்பறைகள் உள்ளிட்டவை கட்டுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில் பயிற்சி டாக்டர்கள் தங்குவதற்கு வசதியாக ரூ.3.21 கோடி மதிப்பில் புதிதாக 2 தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளன. அதாவது ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு இருக்கின்றன. இந்த புதிய தங்கும் விடுதிகள் திறப்பு விழா மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நேற்று காலை நடந்தது. புதிய விடுதிகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் திறப்பு விழாவை அனைவரும் பார்க்கும் வகையில் கலையரங்கத்தில் 4 இடங்களில் எல்.இ.டி. திரை வைக்கப்பட்டு இருந்தது.

விழாவுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். மருத்துவ கல்லூரி டீன் (பொறுப்பு) டாக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதைத் தொடர்ந்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் எல்.இ.டி. திரையில் தோன்றி புதிய தங்கும் விடுதிகளை திறந்து வைத்தார். அதன்பிறகு தங்கும் விடுதிகளின் சிறப்பம்சங்கள் குறித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, கலெக்டர் பிரசாந்த் வடநேரே விளக்கம் அளித்தார். பின்னர் பயிற்சி டாக்டர் தீபிகா என்பவர் நன்றி தெரிவித்து பேசினார்.

விழாவில் கல்லூரி துணை முதல்வர் லியோ டேவிட்சன், உறைவிட மருத்துவர் ஆறுமுகவேலன், குமரி மாவட்ட பால்வள தலைவர் எஸ்.ஏ.அசோகன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், சந்துரு, ஜெயசீலன், விக்ரமன், ராஜகோபால் மற்றும் பயிற்சி டாக்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

இதனையடுத்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே நிருபர்களிடம் பேசுகையில், “ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் 3.21 கோடி ரூபாய் மதிப்பில் பயிற்சி டாக்டர்களுக்கு 2 தங்கும் விடுதிகள் புதிதாக கட்டப்பட்டு உள்ளன. ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு விடுதியிலும் 27 படுக்கை அறைகள் உள்ளன. சமையல் அறை மற்றும் கழிவறைகள் நவீன முறையில் கட்டப்பட்டு இருக்கின்றன. புதிய தங்கும் விடுதிகள் கட்டிக் கொடுத்ததற்கு குமரி மாவட்ட நிர்வாகம் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்“ என்றார்.

பின்னர் பெண்களுக்கான தங்கும் விடுதியில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்.

Next Story