ரூ.2 ஆயிரம் பெறுவதற்கு விண்ணப்பங்கள் பெற மறுப்பு; பொதுமக்கள் சாலைமறியல் மாநகராட்சி அலுவலகம் முன் பரபரப்பு
அரசு அறிவிப்பின்படி ரூ.2 ஆயிரம் பெறுவதற்கு விண்ணப்பங்கள்பெற அதிகாரிகள் மறுத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று வேலூரில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
வேலூர்,
தமிழ்நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் அடிப்படையில் இதில் பயன்பெற தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அரசு அறிவித்தபடி ரூ.2 ஆயிரத்தை பெறுவதற்காக பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு சென்று மனு கொடுத்தனர். பலரது பெயர் விடுபட்டிருந்ததால் புதிதாக பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இந்த நிலையில் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். அதன்பிறகும் தொழிலாளர்கள் ரூ.2 ஆயிரம் பெறுவதற்கு மனுக்கள் கொடுக்க குவிந்து வருகிறார்கள். நேற்று வேலூர் விருப்பாட்சிபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி 3-வது மண்டல அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டதாக கூறி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு அண்ணாசாலையில் ‘திடீர்’ மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வேலூர் தெற்கு போலீசார் விரைந்துசென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story