அரக்கோணம்-திருத்தணி ரெயில் பாதையில் விரிசல் ஏற்படாத புதிய தண்டவாளம் அமைக்கும் பணி


அரக்கோணம்-திருத்தணி ரெயில் பாதையில் விரிசல் ஏற்படாத புதிய தண்டவாளம் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 4 March 2019 10:15 PM GMT (Updated: 2019-03-04T21:24:14+05:30)

அரக்கோணத்திலிருந்து திருத்தணி செல்லும் ரெயில்பாதையில் பழைய தண்டவாளங்களை அகற்றி விட்டு கூடுதலாக 8 கிலோ எடையுள்ள தண்டவாளங்களை மாற்றும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் தண்டவாளத்தில் விரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரக்கோணம்,

அரக்கோணம் ரெயில் நிலையம் 155 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரெயில் நிலையமாகும். 8 பிளாட்பாரங்களுடன் கூடிய இந்த ரெயில் நிலையம் வழியாக மேற்கு மாவட்டங்களுக்கும், ஆந்திரா வழியாக வடமாநிலங்களுக்கும் தினமும் நூற்றுக்கணக்கான ரெயில்கள் சென்று வருகின்றன.

அரக்கோணத்தில் இருந்து திருத்தணி வழியாக வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில் பாதையில் ஒவ்வொரு தண்டவாளமும் 52 கிலோ எடையுள்ள தண்டவாளமாக இப்போது உள்ளன. இவை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் இதனை அகற்றிவிட்டு கூடுதலாக 8 கிலோ எடையுள்ள அதாவது 60 கிலோ எடையுள்ள புதிய தண்டவாளங்களை பொருத்த ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்தது.

அதன்படி கடந்த சில தினங்களாக புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று அரக்கோணத்தில் இருந்து திருத்தணி செல்லும் ரெயில் பாதையில் லெவல் 71-ல் இருந்து லெவல் 74 வரை புதிய தண்டவாளம் அமைக்கும் பணி நடந்தது. ரெயில்வே அலுவலர்கள் மேற்பார்வையில் ஊழியர்கள், சிப்பந்திகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

முதற்கட்டமாக 52 கிலோ எடையுள்ள பழைய தண்டவாளங்களை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் 60 கிலோ எடையுள்ள தண்டவாளங்களை பொருத்தினார்கள். தண்டவாளங்களை இணைக்கும் இடத்தில் வெல்டிங் மூலம் சரி செய்தனர்.

இது குறித்து ரெயில்வே அலுவலர் ஒருவர் கூறுகையில், “52 கிலோ தண்டவாளங்கள் நீண்ட நாள்கள் பயன்பாட்டில் உள்ளதால் அதில் ரெயில்கள் செல்லும்போது விரிசல் மற்றும் பழுதுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதே வேளையில் 60 கிலோ தண்டவாளங்களை பயன்படுத்தும்போது விரிசல் போன்ற எந்தவித சம்பவங்களும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் கிடையாது. இதற்கான பணிகள் தீவிரமாக நடக்கிறது” என்றார்.

Next Story