கர்ப்பிணியானதை கணவர் ஏற்க மறுத்ததால் தீக்குளிக்க முயன்ற பெண் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


கர்ப்பிணியானதை கணவர் ஏற்க மறுத்ததால் தீக்குளிக்க முயன்ற பெண் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 5 March 2019 3:45 AM IST (Updated: 4 March 2019 9:40 PM IST)
t-max-icont-min-icon

கர்ப்பிணியானதை கணவர் ஏற்க மறுத்து முதல் மனைவியுடன் சேர்ந்து தாய் வீட்டுக்கு விரட்டியதால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றார்.

திருவண்ணாமலை, 

பரபரப்பான இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

குடியாத்தம் தாலுகா செதுக்கரை பகுதியை சேர்ந்த பானு (வயது 31) என்பவர் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலக கட்டிடத்தின் அருகே கையில் அவர் மறைத்து வைத்து இருந்த மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றார். இதைக்கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறியதாவது:-

எனக்கும், திருவண்ணாமலையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எனது கணவர் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

எனக்கு அந்த விஷயம் பிறகுதான் தெரியவந்தது. இது குறித்து என் கணவரிடம் கேட்டபோது தகராறு ஏற்பட்டது. மேலும் எனது கணவரின் முதல் மனைவியும், அவரது தாயாரும் என்னை தாக்கி எனது தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டனர்.

தற்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன். எனது கணவரிடம் இது குறித்து கூறியதற்கு அவர் “உனது கர்ப்பத்திற்கும், எனக்கும் சம்பந்தமில்லை” என்று கூறுகிறார். மேலும் அவரது நண்பர்கள் 3 பேர் என்னை மிரட்டுகின்றனர். இதனால் நானும் எனது பெற்றோரும் என்ன செய்வது என்பது தெரியாமல் தவித்து வருகின்றோம். அதனால் தான் நான் இந்த முடிவிற்கு வந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவரை போலீசார் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தினால் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story