புளியந்தோப்பில் கழிப்பறை வசதி கேட்டு சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு


புளியந்தோப்பில் கழிப்பறை வசதி கேட்டு சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 5 March 2019 4:15 AM IST (Updated: 4 March 2019 10:09 PM IST)
t-max-icont-min-icon

புளியந்தோப்பில் கழிப்பறை வசதி கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திரு.வி.க. நகர்,

சென்னை புளியந்தோப்பு காந்தி நகர் பகுதியில் 475 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இந்த பகுதி மக்களுக்காக மாநகராட்சி சார்பில் 4 பொது கழிப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடபட்டிருந்தது. பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இந்த கழிப்பறைகள், கடந்த 2 ஆண்டுகளாக மாநகராட்சியால் பராமரிக்கப்படாமல் இருந்து வந்ததால் அவை சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும் இந்த மாநகராட்சி கழிப்பறைகளை அரசியல் கட்சியினர் சிலர் ஆக்கிரமித்து கால்நடைகளை கட்டி வைத்தும், வாகனங்களை நிறுத்தவும் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர்களை தட்டி கேட்க முடியாத நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் உள்பட 2,000-க்கும் மேற்பட்டோர் சிரமப்பட்டனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்து உள்ளனர். அடிப்படை வசதியான கழிப்பறையை சீரமைப்பதில் மாநகராட்சி அதிகாரிகள் சுணக்கம் காட்டியதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 200 பேர் புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் உள்ள காந்தி நகர் சந்திப்பில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த புளியந்தோப்பு துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் விஜய்ஆனந்த் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ராமசாமி, ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சாலை மறியலை கைவிட மறுத்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கழிப்பறை குறித்து விளக்கம் கொடுத்தால் மட்டுமே கலைந்து செல்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து திரு.வி.க. நகர் மண்டல அதிகாரி ஆனந்தகுமார் மறியல் நடந்த இடத்திற்கு விரைந்து வந்தார்.

10 நாட்களுக்குள் ஒரு கழிப்பறை புதிதாக கட்டப்படும் என்றும், மற்ற 3 கழிப்பறைகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு விடப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் கடும்போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story