சூளகிரி அருகே 23-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோதண்டராமர் சிலை


சூளகிரி அருகே 23-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோதண்டராமர் சிலை
x
தினத்தந்தி 5 March 2019 3:45 AM IST (Updated: 4 March 2019 10:12 PM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே தொடர்ந்து 23-வது நாளாக கோதண்டராமர் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஓசூர், 

திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டையில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 350 டன் எடை கொண்ட பிரமாண்ட கோதண்டராமர் சிலை, பெங்களூரு ஈஜிபுரா எனுமிடத்தில் பீடத்துடன் இணைத்து 108 அடி உயரத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. 64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட சிலை, ராட்சத லாரியில் கடந்த நவம்பர் 7-ந் தேதி புறப்பட்டு பல்வேறு தடைகளை கடந்து ஜனவரி மாதம் 16-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை வந்தது.

அங்கிருந்து கடந்த மாதம் 9-ந் தேதி கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே சாமல்பள்ளம் என்னும் இடத்திற்கு வந்தது. அந்த பகுதியில் உள்ள சிறு பாலத்தை கடக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதி மறுத்ததால் சிலை லாரியுடன் நிறுத்தப்பட்டது.

இதற்காக, பாலத்தின் அருகே, புதிதாக தற்காலிக மண்சாலை அமைக்கும் பணி நடந்தது. தற்போது சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து சிறிது தொலைவில் மேலும் சிறு, சிறு பாலங்கள் உள்ளன. அந்த பகுதிகளில் தற்காலிக பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பேரண்டப்பள்ளி அருகில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தை இந்த சிலை கடக்க வேண்டியது உள்ளது. இதனால் வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் பாதை அமைக்க சிலையை கொண்டு செல்லும் குழுவினர் அனுமதி கேட்டுள்ளனர்.

அவர்கள் அனுமதி தந்த பிறகு அந்த பகுதியில் பாதை அமைக்கப்பட்ட பிறகே சிலை கொண்டு செல்லப்படும் என்று சிலையை கொண்டு செல்லும் குழுவினர் தெரிவித்தனர். மேலும் தற்போது இருக்கும் இடத்தில் இருந்து சிலையை தொடர்ந்து நிறுத்தாமல் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், இடையில் வேறு இடத்தில் சிலையை நிறுத்த போதுமான வசதி இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக நேற்று 23-வது நாளாக கோதண்டராமர் சிலை அந்த இடத்திலேயே இருக்கிறது. சாமி சிலையை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் தரிசனம் செய்கின்றனர்.

Next Story