அரசு விழா ரத்து செய்யப்பட்டதால் தாலிக்கு தங்கம் கேட்டு காத்திருந்த பயனாளிகள்


அரசு விழா ரத்து செய்யப்பட்டதால் தாலிக்கு தங்கம் கேட்டு காத்திருந்த பயனாளிகள்
x
தினத்தந்தி 4 March 2019 10:30 PM GMT (Updated: 2019-03-04T22:46:06+05:30)

தேனியில் அரசு விழா ரத்து செய்யப்பட்டதால் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதிஉதவி கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு பயனாளிகள் பலர் வந்தனர். அவர்கள் அங்கு நீண்ட நேரம் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

தேனி,

பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நேற்று நடப்பதாக இருந்தது. இதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையில் விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து இருந்தது.

இந்நிலையில், நேற்று நடக்க இருந்த விழா திடீரென ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே நூற்றுக்கணக்கான பயனாளிகள் நேற்று காலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். தங்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவி வழங்க உள்ளதாகவும், அதை பெற்றுச் செல்வதற்கு வந்துள்ளதாகவும் அலுவலக வளாகத்தில் அவர்கள் காத்திருந்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் சமூக நலத்துறை அலுவலர்கள் அங்கு வந்து, விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால், பயனாளிகள் ஏமாற்றம் அடைந்தனர். வந்திருந்த பயனாளிகளில் கர்ப்பிணிகளும், கைக் குழந்தையுடன் தாய்மார்களும் அதிக அளவில் இருந்தனர். 1 மணி நேரத்துக்கும் மேலாக அவர்கள் அங்கே காத்திருந்தனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனால், வந்திருக்கும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை வழங்க கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அவர்களின் பெயர், விவரங்கள் சரிபார்க்கப்பட்டது. அவர்களில் பாதிபேருக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதிஉதவி வழங்கப்பட்டது. மீதம் பேருக்கு மற்றொரு நாளில் வழங்குவதாக கூறி அனுப்பி வைக்கப்பட்டனர். தாலிக்கு தங்கம் கேட்டு நூற்றுக்கணக்கானவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து டோக்கன் வழங்கிய அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, ‘லட்சுமிபுரத்தில் நடக்க இருந்த விழாவில் பயனாளிகள் பாதி பேருக்கும், மீதம் உள்ளவர்களை கலெக்டர் அலுவலகத்துக்கு வரவழைத்தும் நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது. விழா ரத்து செய்யப்பட்டது பற்றி பயனாளிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், தகவல் கிடைக்கப்பெறாத பயனாளிகள், கலெக்டர் அலுவலகம் வந்து விட்டனர். ரத்து செய்யப்பட்ட அரசு விழாவை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் மீதம் உள்ள பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்’ என்றார்.

Next Story