பூந்தமல்லியில் தண்ணீர் லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்


பூந்தமல்லியில் தண்ணீர் லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 5 March 2019 3:45 AM IST (Updated: 4 March 2019 10:50 PM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லியில் தண்ணீர் லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேப்பூர் தாங்கல் பகுதியில் சட்டவிரோதமாக 15-க் கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறு கள் மற்றும் விவசாய கிணறுகளில் மோட்டார் அமைத்து இரவு-பகலாக டேங்கர் லாரிகளில் குடிநீர் திருடப்பட்டு சென்னையில் உள்ள குடியிருப்புகள், ஓட்டல்களுக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக கூறி, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அங்கு விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்துவந்த லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த நசரத்பேட்டை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள் கூறும்போது, “இங்குள்ள விவசாய கிணறுகளில் தண்ணீர் திருடி விற்கப்படுவதாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகே உள்ள எங்கள் கிராமத்தில் குடிநீர் திருடப்பட்டு வருவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. நாங்கள் அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று தண்ணீர் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்” என்றார்.

இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் லாரியில் தண்ணீர் திருடிச்சென்றதாக ஒருவரை கைது செய்தனர். இதனால் சிறைபிடித்த தண்ணீர் லாரியை விடுவித்த அவர்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story