தூத்துக்குடியில், ரூ.7,300 கோடியில் புதிய அனல் மின்நிலையம் - மத்திய மந்திரி பியூஸ் கோயல் நாட்டுக்கு அர்ப்பணித்தார்


தூத்துக்குடியில், ரூ.7,300 கோடியில் புதிய அனல் மின்நிலையம் - மத்திய மந்திரி பியூஸ் கோயல் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
x
தினத்தந்தி 4 March 2019 11:15 PM GMT (Updated: 4 March 2019 5:28 PM GMT)

தூத்துக்குடியில் ரூ.7ஆயிரத்து 300 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள புதிய அனல் மின்நிலையத்தை மத்திய மந்திரி பியூஸ் கோயல் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அருகே நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து ரூ.7 ஆயிரத்து 300 கோடி செலவில் புதிதாக என்.டி.பி.எல். அனல் மின்நிலையத்தை அமைத்து உள்ளது. இதில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன்கொண்ட 2 மின்உற்பத்தி எந்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மின்உற்பத்தி எந்திரங்கள் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மின்சாரம் உற்பத்தி செய்து வருகின்றன.

இந்த நிலையில் என்.டி.பி.எல். அனல் மின்நிலையம் மற்றும் என்.எல்.சி நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டு உள்ள 200 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பள்ளி வளாகத்தில் நேற்று காலை நடந்தது. விழாவுக்கு மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை மந்திரி பியூஸ் கோயல் தலைமை தாங்கி அனல் மின்நிலையம் மற்றும் சூரிய ஒளி மின்உற்பத்தி திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, கடம்பூர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.எல்.சி. நிறுவன தலைவர் ராகேஷ்குமார் வரவேற்று பேசினார். விழாவில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேசியதாவது:-

காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர் சுப்பிரமணியன், அரியலூரை சேர்ந்த சிவச்சந்திரன் ஆகியோர் இறந்து உள்ளனர். அவர்களது குடும்பத்துக்கு ஆறுதலையும், இறந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வீரர்களின் தியாகமும் வீரமும் வீண் போகாதது.

நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் யாரையும் பிரதமர் விட்டு வைக்க மாட்டார். நாடு முழுவதும் இந்திய விமானி அபிநந்தன் மீது அன்பை செலுத்தி கொண்டு இருக்கிறார்கள். அவருக்கு பாராட்டும் விதமாக நீங்கள் எழுந்து நின்று இடிமுழக்கம் போல் கைத்தட்டுங்கள். இது டெல்லிக்கு கேட்க வேண்டும். நீங்கள் எழுப்பும் கரவொலி பாகிஸ்தானுக்கு பயமுறுத்தலாக வேண்டும்.

1,000 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட அனல் மின்நிலையத்தை நாட்டுக்கு முழுமையாக அர்ப்பணிக்கிறோம். இங்கு 100 சதவீதம் இந்திய நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இதற்காக உழைத்த அனைத்து ஊழியர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயலலிதா பிறந்த நாள் அன்று ஏழை விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருக்கும் என்பதற்காக உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இந்த பணம் கொடுப்பது உதவியோ, தானமோ இல்லை. விவசாயிகளுக்கு கொடுக்கும் மரியாதை.

அமைப்புசாரா தொழிலாளர்கள் நாட்டில் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு சமூக பாதுகாப்பு கொடுக்கும் வகையில் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் நாளை (அதாவது இன்று) தொடங்கப்படுகிறது.

என்.எல்.சி. நிறுவனம் சிறப்பாக வளர்ச்சி பெற்று உள்ளது. தற்போது என்.எல்.சி. நிறுவனத்திடம் புதிதாக ஒரு அனல் மின்நிலையத்தை தொடங்க வேண்டும் என்ற திட்டத்தை தெரிவித்து உள்ளேன். அடுத்த முறை வரும்போது, அதனை நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும். என்.டி.பி.எல். நிறுவன ஊழியர்களுக்கு ரூ.8 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். அதே போன்று ஒப்பந்த தொழிலாளர்கள், பாதுகாப்பு படையினருக்கும் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை அறிவிக்கிறேன். என்.எல்.சி. ஊழியர்கள் நான் கொடுத்து இருக்கும் திட்டத்தை முழுமையாக முடிக்கும் போது, உங்களுக்கும் சலுகைகளை அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாநில பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், என்.டி.பி.எல். இயக்குனர்கள் விக்ரமன், சவுக்கி, ராவ், ஷாஜிஜான், என்.டி.பி.எல். தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் என்.டி.பி.எல். அனல் மின்நிலைய இயக்குனர் தங்கபாண்டியன் நன்றி கூறினார்.

Next Story