குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் 16 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்
நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.94 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் 484 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட உத்தரவிட்டார்.
திருப்பூர் மாவட்டம் போயம்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் காளிமுத்து என்பவர் குமாரபாளையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்து விட்டதால், அவரது குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையை அவரது வாரிசான பெரியசாமியிடம் கலெக்டர் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.4,900 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்கள் உள்பட மொத்தம் 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.94 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) துரை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story