கலைமாமணி விருது வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தை நாட்டுப்புற கலைஞர்கள் முற்றுகை


கலைமாமணி விருது வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தை நாட்டுப்புற கலைஞர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 5 March 2019 4:30 AM IST (Updated: 4 March 2019 11:28 PM IST)
t-max-icont-min-icon

கலைமாமணி விருது வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை நாட்டுப்புற கலைஞர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்,

தமிழக அரசு சார்பில் நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் வகையில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு கலைமாமணி விருதை, இசை நாடக மன்றத்தின் மூலமாக வழங்கி வருகிறது. இந்த விருது 8 ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கபட்டிருந்த நிலையில் தற்போது அந்த விருது பட்டியலை அரசு அறிவித்துள்ளது.

இந்த பட்டியலில் 201 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் சென்னை பகுதியை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் நாட்டுப்புற கலைஞர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் பல்வேறு வேடமணிந்தபடி நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயிலை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட நாட்டுப்புற கலைஞர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச்செய்தனர். அதன் பின்னர் அவர்கள், கலெக்டர் சுப்பிரமணியனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தற்போது தமிழக அரசு கலைமாமணி விருது பட்டியலை அறிவித்துள்ளது. இதில் நாட்டுப்புற கலைஞர்கள் யாருடைய பெயர்களும் இடம் பெறவில்லை. பாரம்பரிய கலையான தெருக்கூத்து மற்றும் இதர கலைஞர்கள் ஒருவருக்கு கூட வழங்கப்படவில்லை. சினிமா துறையில் உள்ளவர்கள், துணை நடிகர்களுக்கும், தமிழே தெரியாத சில கலைஞர்களுக்கும்தான் வாரி வழங்கி இருக்கிறது. உண்மையான கலையான நாட்டுப்புற கலைகள் கிராமத்தில்தான் உள்ளது. ஆனால் தமிழக அரசு, திரைப்படங்களில் லட்சக்கணக்காக சம்பாதிப்பவர்களை மட்டும் கவுரப்படுத்துகிறது. தமிழகத்திலே நாட்டுப்புற கலைஞர்கள் விழுப்புரம் மாவட்டத்தில்தான் அதிகளவில் உள்ளனர். அரசு இசைப்பள்ளியில் 5,700 பேர் பதிவு செய்து உள்ளார்கள். பல நாட்டுப்புற கலைகள் சங்கம் இயங்கி வருகிறது. ஆனால் அனைத்து கலைஞர்கள் நிறைந்த இந்த விழுப்புரம் மாவட்டத்திற்கு ஒன்றுகூட கலைமாமணி விருது வழங்கப்படவில்லை என்பதை அறிந்து மிகவும் மனவேதனையுடன் உள்ளோம். ஆகவே தாங்கள் எங்களது கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார்.

Next Story