டாஸ்மாக் கடையில் வெள்ளிப்பட்டறை அதிபருக்கு கத்திக்குத்து 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு


டாஸ்மாக் கடையில் வெள்ளிப்பட்டறை அதிபருக்கு கத்திக்குத்து 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 4 March 2019 10:15 PM GMT (Updated: 2019-03-04T23:36:10+05:30)

சேலத்தில் டாஸ்மாக் கடையில் வெள்ளிப்பட்டறை அதிபரை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னங்குறிச்சி, 

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 40). இவர் அந்த பகுதியில் வெள்ளிப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று மதியம் கோமப்பட்டி அருகே உள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடையில் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தார்.

அருகில் சின்னகொல்லப்பட்டியை சேர்ந்த சாமிநாதன் (50), கர்ணன் (45), சிவக்குமார் (44) ஆகிய 3 பேர் ஒன்றாக அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்கும், அண்ணாமலைக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரில் ஒருவர் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து அண்ணாமலையின் இடுப்பில் குத்தி உள்ளார்.

இதில் ரத்தம் பீறிட்டு வெளியில் வந்தநிலையில் அவர் மதுக்கடையிலேயே மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்ததும் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் மயங்கி கிடந்த அண்ணாமலையை அக்கம், பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் அண்ணாமலையிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டு அறிந்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். சாமிநாதன், கர்ணன், சிவக்குமார் ஆகிய 3 பேர் மீதும் ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மதுக்கடையில் பட்டப்பகலில் நடந்த இந்த கத்திக்குத்து சம்பவம் நேற்று அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story