ஆங்கிலம் பேசினால் மதிப்பு என்று நினைப்பது தவறு: ‘நல்ல தமிழ் பேசுபவர்களுக்கு உண்மையில் மதிப்பு கூடுகிறது’


ஆங்கிலம் பேசினால் மதிப்பு என்று நினைப்பது தவறு: ‘நல்ல தமிழ் பேசுபவர்களுக்கு உண்மையில் மதிப்பு கூடுகிறது’
x
தினத்தந்தி 5 March 2019 4:30 AM IST (Updated: 5 March 2019 12:09 AM IST)
t-max-icont-min-icon

ஆங்கிலம் பேசினால் மதிப்பு என்று நினைக்கிறார்கள். அது உண்மையிலேயே தவறு. நல்ல தமிழ் பேசுபவர்களுக்கு உண்மையிலேயே மதிப்பு கூடுகிறது என்று தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் வேலைவாய்பு வழிகாட்டுதல் மையம் சார்பில் தமிழ் மொழித்திறன் பயிலரங்க தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிர மணியன் தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

ஒரு மனிதனுடைய ஆளுமையை வெளிப்படுத்துவது பல பண்புகள். அதற்கு மிக இன்றியமையாதது மனிதனுடைய மொழித்திறன். எவ்வளவுதான் கல்வி அறிவு பெற்று இருந்தாலும் அவையறிந்து வெளிப்படுத்த இயலவில்லை என்றால் அந்த கல்வி வீண் என்று பொருள். மொழித்திறன் மிக அடிப்படையான ஒன்று. கல்வியில் மாணவர்கள் எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும்போது தமிழை சொல்லிக்கொடுக்கும்போது அதில் தவறு இல்லாமல் எழுதுவதற்கும், பேசுவதற்கும் பயிற்சி கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

அந்த வகையில் ஆளுமைத்திறன் முக்கியமானது. ஆங்கிலத்தில் பேசுவதால் அவர்களுக்கு மதிப்பு வந்து விடுகிறது என்று நினைக்கிறார்கள். அது உண்மையிலேயே தவறு. நல்ல தமிழை பேசுபவர்களுக்கு உண்மையில் மதிப்பு கூடுகிறது. தமிழ் பல்கலைக்கழகத்தில் படித்து வெளியில் செல்கின்ற மாணவர்கள் அனைவரும் தமிழில் எழுதும்போது தவறு இல்லாமல் எழுதி பழகுவோம் என்று உறுதி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முனைவர் மருதூர் அரங்கராசன் ‘தமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி’ என்ற தலைப்பில் பேசினார். அவர் பேசும்போது, மக்களுக்கான மொழியும், இலக்கியத்திற்கான மொழியும் அதிக இடைவெளி இல்லாமல் இருக்குமேயானால் அந்த மொழியை காப்பாற்றலாம். எல்லாவற்றுக்கும் மேலாக எந்த மொழியை அதனுடைய அடுத்த தலைமுறை- இளைய தலைமுறை தேடவில்லையோ, பேசவில்லையோ, பயன்படுத்தவில்லையோ அந்த மொழி அழியும் என்றார். நிகழ்ச்சியில் மொழிப்புல முதன்மையர் முரளிதரன் வாழ்த்தி பேசினார். வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் மைய ஒருங்கிணைப்பாளர் சின்னப்பன் கலந்து கொண்டார். முன்னதாக முனைவர் சீனிவாசன் வரவேற்று பேசினார். முடிவில் முனைவர் பட்ட ஆய்வாளர் வெண்ணிலா நன்றி கூறினார்.

Next Story