பெங்களூருவில் நடந்தது சித்தராமையா தலைமையில் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 12 தொகுதிகள் ஒதுக்க ஜனதா தளம்(எஸ்) கோரிக்கை


பெங்களூருவில் நடந்தது சித்தராமையா தலைமையில் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 12 தொகுதிகள் ஒதுக்க ஜனதா தளம்(எஸ்) கோரிக்கை
x
தினத்தந்தி 5 March 2019 5:00 AM IST (Updated: 5 March 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் சித்த ராமையா தலைமையில் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 12 தொகுதிகளை ஒதுக்க ஜனதா தளம்(எஸ்) கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது. முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் பணியாற்றி வருகிறார்கள்.

கூட்டணி கட்சிகள் இடையே எழும் கருத்து வேறுபாடுகளை சரிசெய்யவும், மாநில அரசு முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, அதுபற்றி விவாதிக்கவும் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு மாதத்தில் ஒரு முறை கூடி அரசியல் நிலவரங்கள், முக்கியமான நியமனங்கள் குறித்து ஆலோசனை நடத்தும்.

இந்த நிலையில் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதுதொடர்பாக தொகுதி பங்கீடு பற்றி விவாதிக்க சித்தராமையா தலைமையில் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மார்ச் 5-ந்தேதி (அதாவது நேற்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அதன் தலைவர் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் உள்ள குமரகிருபா விருந்தினர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

இதில் முதல்-மந்திரி குமாரசாமி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், துணை முதல்- மந்திரி பரமேஸ்வர், ஜனதா தளம்(எஸ்) பொதுச் செயலாளர் டேனிஷ்அலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் தங்கள் கட்சிக்கு 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று ஜனதா தளம்(எஸ்) கட்சி அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்தது. இதுபற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

யார்-யாருக்கு எந்தெந்த பகுதியில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டம் நிறைவடைந்த பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி கட்சிகள் ஒன்றுபட்டு சந்திப்பது என்று முடிவு எடுத்துள்ளோம். நாங்கள் ஒன்றாக போட்டியிட்டால் காங்கிரஸ் கூட்டணி 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும்.

தொகுதி பங்கீடு குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 12 தொகுதிகளை ஒதுக்குமாறு ஜனதா தளம்(எஸ்) கேட்டுள்ளது. அதுகுறித்து விவாதித்தோம். எந்தெந்த தொகுதியில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது பற்றியும் விவாதித்தோம்.

தொகுதி பங்கீடு விவகாரம் மாநில தலைவர்கள் அளவிலேயே பேசி முடிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. பா.ஜனதாவை தோற்கடிக்க கர்நாடகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து செயல்பட்டது. அதுபோல் நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிடு கிறோம். வருகிற 10-ந் தேதிக்குள் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story