சாகரில் குரங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் சாவு பலி எண்ணிக்கை 13-ஆக உயர்வு


சாகரில் குரங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் சாவு பலி எண்ணிக்கை 13-ஆக உயர்வு
x
தினத்தந்தி 5 March 2019 4:45 AM IST (Updated: 5 March 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

சாகரில் குரங்கு காய்ச் சலுக்கு மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது.

சிவமொக்கா, 

சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில் குரங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் சிவமொக்கா தவிர மற்ற 6 தாலுகாக்களிலும் குரங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. வனப்பகுதியில் கே.எப்.டி. வைரஸ் தாக்கி உயிரிழக்கும் குரங்குகள் மூலம் இந்த நோய் பரவி வருகிறது.

சிவமொக்கா மாவட்டத்தில் இதுவரை 12 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிவமொக்கா, மங்களூரு, மணிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குரங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சி மேற்கொண்டாலும், அந்த நோய் தொடர்ந்து பரவி வருகிறது.

இந்த குரங்கு காய்ச்சல் பக்கத்து மாவட்டங்களான சிவமொக்கா, தாவணகெரே, உத்தரகன்னடா ஆகிய பகுதிகளுக்கும் பரவி வருகிறது. அந்த மாவட்ட வனப்பகுதிகளில் கே.எப்.டி. வைரஸ் தாக்கி குரங்குகள் செத்து வருகின்றன. சிவமொக்கா மாவட்ட வனப்பகுதிகளில் கே.எப்.டி. வைரஸ் தாக்கி சாவும் குரங்குகளை உடனடியாக அப்புறப்படுத்த சுகாதார துறை அதிகாரிகளும், வனத்துறையினரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் வனப்பகுதியில் செத்து கிடக்கும் குரங்களின் உடல்களை தீவைத்து கொழுத்தி விடுகின்றனர். பின்னர் வனப்பகுதிகளையொட்டி உள்ள கிராமங்களில் நோய் பரவாமல் தடுக்க சுகாதார துறை சார்பில் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

சிவமொக்கா மாவட்டத்தில் சாகர் தாலுகாவில் தான் குரங்கு காய்ச்சலுக்கு அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தான் குரங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் சாகர் தாலுகா நந்தகோடி கிராமத்தில் யாலகோடு பஜார் பகுதியில் வசித்து வந்த சீதம்மா (வயது 58) என்பவர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.

அவர், உடுப்பி மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் சாகர் தாலுகாவில் ஒரு பெண் உள்பட 2 ேபர் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்துள்ளனர். தற்ேபாது சீதம்மாவையும் சேர்ந்து சாகர் தாலுகாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குரங்கு காய்ச்சலுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார துறையினர் எவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும் குரங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பது அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. சிவமொக்கா மாவட்ட மக்களை குரங்கு காய்ச்சல் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதால், அவர்கள் பீதியில் உள்ளனர்.

Next Story