கழிவறை தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி சாவு தனியார் பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் கைது


கழிவறை தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி சாவு தனியார் பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 March 2019 4:15 AM IST (Updated: 5 March 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கழிவறை தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழந்தார். இதுதொடர்பாக தனியார் பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு, 

பெங்களூரு ஒங்கசந்திரா அருகே வசித்து வருபவர் மனு (வயது 27). இவரது மனைவி நந்தினி. இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கூலித் தொழிலாளியான மனு, ஒங்கசந்திராவில் ஒரு தனியார் பள்ளியில் உள்ள கழிவறையில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய கடந்த 2-ந் தேதி பள்ளிக்கு சென்றிருந்தார். கழிவறையையொட்டி உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி அவர் அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அந்த சந்தர்ப்பத்தில் திடீரென்று அவரை விஷவாயு தாக்கியது. இதனால் அவர் மயக்கம் போட்டு விழுந்தார்.

உடனே பள்ளியில் வேலை செய்யும் ஊழியர்கள் மனுவை கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். போலீஸ் விசாரணையில், கழிவறையில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய மனு விஷவாயு தாக்கியதால் மூச்சு திணறி பலியானது தெரியவந்தது.

இதுபற்றி அறிந்ததும் பேகூர் போலீஸ் நிலையத்தில் மனுவின் மனைவி நந்தினி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கழிவறையில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய முன் எச்சரிக்கையாக எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யாமல் தொட்டிக்குள் இறங்கியதால், அவர் விஷவாயு தாக்கி மூச்சு திணறி உயிர் இழந்ததும், தனியார் பள்ளி நிர்வாகிகளின் அலட்சியத்தால் தான் அவர் பலியானதும் தெரியவந்தது.

இதையடுத்து, தனியார் பள்ளியின் முதல்வரான ராகவன், துணை முதல்வர் சரோஜா, பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் கிஷோர்குமார் ஆகிய 3 பேரையும் பேகூர் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story