இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்க முப்படைகளும் பயன்படுத்தப்படும் - கோவை விமானப்படை விழாவில் ஜனாதிபதி பேச்சு
‘இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்க முப்படைகளும் பயன்படுத்தப்படும்’ என்று கோவையில் நடந்த விமானப்படை விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார்.
கோவை,
கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் உள்ள 5-வது அணி பணிமனை (ரிப்பேர் டெப்போ) மற்றும் ஆந்திராவில் உள்ள ஹகிம்பேட் விமானப்படை தளம் ஆகியவற்றுக்கு 25 ஆண்டுகால சிறந்த சேவைக்கான விருதுகள் வழங்கும் விழா சூலூர் விமானப்படை தளத்தில் நேற்று காலை நடந்தது.
இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் அவர் வந்து நின்றதும் அவரை வரவேற்கும் வகையில், வானத்தில் பறந்து வந்த 3 ஹெலிகாப்டர்களும் மேடைக்கு எதிரில் தேசிய கொடியையும், விமானப்படையின் கொடியையும் பறக்க விட்டவாறு அவரை கடந்து சென்றன. அதை பார்த்து ஜனாதிபதி மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து சூலூர் 5-வது அணி பணிமனைக்கும், ஆந்திர மாநிலம் ஹகிம்பேட் விமானப்படை தளத்துக்கும் சிறந்த சேவை விருதுக்காக தனி கொடியை வழங்கினார். அதன்பின்னர் அவர் பேசியதாவது:-
இங்கு விருது பெற்ற சூலூர் 5-வது அணி பணிமனையும், ஆந்திர மாநிலம் ஹகிம்பேட் விமானப்படை தளமும் நாட்டிற்கு அமைதியான நாட்களிலும், போர் காலங்களிலும் அளப்பரிய சேவையை அளித்துள்ளன. அவற்றின் சேவையை பாராட்டி நாடு நன்றியுடன் இன்று பாராட்டு தெரிவிக்கிறது.
இந்தியாவின் சீரான வளர்ச்சிக்கும், மரியாதைக்கும் வலுவான, திறமையான நமது ராணுவம் தான் காரணம். இந்தியா தொடர்ந்து அமைதியில் தான் நாட்டம் கொண்டதாக உள்ளது. அமைதியை நிலைநாட்டவும், அதே நேரத்தில் தேவைப்படும் பட்சத்தில் இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்கவும் முப்படைகளும் பயன்படுத்தப்படும். அதற்கு இங்குள்ள வீரமிக்க ஆண் மற்றும் பெண் விமானப்படை வீரர்கள் உதவியாக இருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதை என் முன்பு நின்றிருக்கும் வீரர்கள் நமது நாட்டை பாதுகாப்பதற்கான பணிகளை மேற்கொள்வார்கள். சமீபத்தில் நமது எல்லையோரம் அமைந்திருந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய துல்லிய தாக்குதலில் இருந்து நமது வீரம் வெளிப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை சிறப்பாக செயல்படுவதற்காக பல ஆண்டுகளாக தொழில் நுட்பரீதியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. நவீன காலத்துக்கேற்ப இந்திய விமானப்படை தொடர்ந்து நவீனப்படுத்துவதற்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. நாட்டின் பாதுகாப்புக்காக மட்டுமல்லாமல் இயற்கை பேரிடர் காலங்களிலும் மக்களை பாதுகாப்பதிலும், சீரமைப்பு பணிகளிலும் இந்திய விமானப்படை மனிதாபிமான அடிப்படையில் ஈடுபட்டு வருகிறது. இது போன்ற விடாப்பிடியான, திறமையான, வீரமிக்க இந்திய ராணுவத்தினால் நாடு பெருமை கொள்கிறது. நமது விமானப்படையை திறமையாக செயல்படுத்துவது நாட்டின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமான விஷயம் ஆகும்.
அதன்படி தான் சூலூர் விமானப்படை தளத்தில் உள்ள 5-வது அணி பணிமனையில் கிரன், ஆவ்ரோ, டோர்னியர் ஆகிய விமானங்கள் சிறந்த முறையில் பராமரிக்கப்படுவதால் அவைகளை 30 ஆண்டுகளாக பயன்படுத்த முடிகிறது என்றால் மிகையாகாது. மனிதர்கள் என்றும் இளமையாக இருக்க ‘காய கல்பம்’ உதவுவது போல, சூலூர் விமானப்படை தளத்தில் உள்ள 5-வது அணி பணிமனை இந்திய விமானப்படை விமானங்களை புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் புதுப்பித்து வருகிறது. மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின்படி உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட உதிரிபாகங்களை தயாரிக்க 5-வது அணி பணிமனை முயற்சித்து வருகிறது. இதன் மூலம் இந்திய விமானப்படைக்கு தேவையான உதிரிபாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
இதே போல ஹகிம் பேட் விமானப்படை தளம் இந்திய விமானப்படை விமானிகளுக்கு தரமான பயிற்சி அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 1965 மற்றும் 1971-ம் ஆண்டுகளில் நடந்த போரின் போது இந்த விமானப்படை தளத்தில் பயிற்சி பெற்ற விமானிகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் குறிப்பிடத்தக்க அளவில் பணியாற்றியுள்ளனர். 1995-ம் ஆண்டு முதல் ஹகிம்பேட் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர்களில் பெண் விமானிகளுக்கும், 2016-ம் ஆண்டு முதல் போர் விமானங்களில் பெண் விமானிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த விமானப்படை தளம் பல்வேறு இயற்கை பேரிடர் காலங்களில் மனிதாபிமான அடிப்படையில் சீரமைப்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளது.
எனவே இந்திய விமானப்படைக்கு மெச்சத்தக்க அளவில் சிறப்பாக பணியாற்றிய சூலூர் மற்றும் ஹகிம்பேட் விமானப்படை தளங்களுக்கு சிறந்த சேவைக்கான விருதுகளை வழங்குவதில் பெருமை கொள்கிறேன். அங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பின்னர் சிறப்பு மலர் மற்றும் தபால் தலைகளையும் ஜனாதிபதி வெளியிட்டார். முன்னதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு சூலூர் 5-வது அணி பணிமனை விமானப்படை வீரர்களும், ஹகிம்பேட் விமானப்படை தள வீரர்களும் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். அதை ஜனாதிபதி திறந்த ஜீப்பில் சென்று ஏற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதியின் மனைவி சபிதா கோவிந்த், இந்திய விமானப்படை தலைமை தளபதி பிரேந்திர சிங் தனோவா, தென்னிந்திய விமானப்படை தளபதி சுரேஷ், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, சூலூர் விமானப்படை 5-வது அணி பணிமனை ஏர் கமோடர் அதுல் கார்க், ஹகிம்பேட் விமானப்படை தள ஏர்கமோடர் ஆர்.கே.ஓபராய், ஈஷா யோக மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உள்பட விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து விமானப்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் தேஜஸ் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் ‘ஆகாஷ் கங்கா’ குழு வீரர்கள் பாராகிளைடிங் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர். அவற்றை ஜனாதிபதி ஆர்வத்துடன் கண்டு களித்தார்.
பார்வையாளர்களை பரவசப்படுத்திய விமான சாகச நிகழ்ச்சிகள்
சூலூர் விமானப்படை தளத்தில் சிறந்த சேவைக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சி நடத்தி காட்டப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கியதும் விமானப்படை வீரர்கள் பாரா கிளைடிங்கில் பறந்து வந்து கீழே குதித்தனர்.
அதைத்தொடர்ந்து விமானப்படை வீரர்கள் 5 கிலோ எடையுள்ள துப்பாக்கியை கையில் ஏந்தி மேலே அந்தரத்தில் தூக்கிப்போட்டும், சுழற்றியும் பல்வேறு சாகசங்களை செய்து காட்டினார்கள். வரிசையாக நடந்து சென்ற 10 வீரர்களின் கையில் இருந்த துப்பாக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் பின்னால் நடந்து வந்த வீரரின் கைக்கு மாறியதை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
அதன்பின்னர் ‘சராங்’ என்ற ஹெலிகாப்டர் சாகச குழுவினர் விண்ணில் பறந்து சென்று சாகச செயல் களை நிகழ்த்தினர். அப்போது 4 ஹெலிகாப்டர்கள் சம தூரத்தில் பறந்தும், ஒரு ஹெலிகாப்டர் ஒரு திசையில் இருந்து வர, எதிர்திசையில் வந்த 3 ஹெலிகாப்டர்கள் அந்த ஹெலிகாப்டர் மீது மோதுவது போல வந்து திடீரென்று அப்படியே திரும்பி சென்றது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பல ஆயிரம் அடி உயரத்தில் பறந்து வந்த 4 ஹெலிகாப்டர்களும் புகையை கக்கியவாறு தரையை நோக்கி பாய்வது போல வந்து திடீரென்று அப்படியே செங்குத்தாக மேலே எழும்பி சென்றது பார்வையாளர்களை கைதட்ட வைத்தது. அடுத்தடுத்து சம தூரத்தில் பறந்து வந்த 4 ஹெலிகாப்டர்களில் திடீ ரென்று 2 ஹெலிகாப்டர்கள் வலது பக்கமும், 2 ஹெலிகாப்டர்கள் இடது புறமும் திரும்பி ஒன்றோடு ஒன்று மோதுவது போல சென்றது பார்வையாளர்களை பரவசம் அடைய செய்தது. ஹெலிகாப்டர்கள் குறைந்தபட்சம் 50 மீட்டர் உயரத்தில் தான் பறக்க முடியும். அந்த உயரத்தில் பறந்து வந்த 4 ஹெலிகாப்டர்களும் திடீரென்று ஒரு ஹெலிகாப்டர் செங்குத்தாக மேலே எழும்பியும், ஒரு ஹெலிகாப்டர் வலது புறமும், மற்றொரு ஹெலிகாப்டர் இடது புறமும், மற்றொரு ஹெலிகாப்டர் அவற்றிற்கு கீழ் தாழ்வாக பறந்து சென்றது ஆச்சரியப்பட வைத்தது.
அடுத்து உள்நாட்டு தயாரிப்பான ‘தேஜஸ்’ போர் விமானம் பயங்கர சத்தத்துடன் தரையில் இருந்து புறப்பட்டு புகையை கக்கியவாறு விண்ணில் பல்வேறு சாகசங்களை செய்தது. அதன் விமானி விண் ணில் செங்குத்தாகவும், குட்டிக்கரணம் அடித்தும், மிக குறைந்த வேகத்தில் சென்றும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
Related Tags :
Next Story