நாகர்கோவிலில் இருந்து சாமித்தோப்புக்கு அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


நாகர்கோவிலில் இருந்து சாமித்தோப்புக்கு அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 5 March 2019 4:15 AM IST (Updated: 5 March 2019 12:37 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தென்தாமரைகுளம்,

அய்யா வைகுண்டரின் அவதான தின விழாவை, அய்யாவழி பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20-ந் தேதி கொண்டாடி வருகின்றனர். அதேபோல் இந்த ஆண்டும் அய்யா வைகுண்டரின் 187-வது அவதார தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.

அய்யா வைகுண்டர் அவதார தின விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்செந்தூர், திருவனந்தபுரம், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினம் இரவே நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு வந்து தங்கினர்.

நேற்று காலை 6 மணிக்கு நாகராஜா கோவில் திடலில் இருந்து அய்யா வைகுண்டர் அவதார தின விழா ஊர்வலம் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட அய்யா வாகனத்துக்கு முன்னால் முத்துக்குடைகளை கைகளில் ஏந்தியபடி, மேளதாளங்கள் முழங்க தலைப்பாகை அணிந்த அய்யா வழி பக்தர்கள் சென்றனர். அப்போது அவர்கள், அய்யா சிவ... சிவா... அரகரா... அரகரா... என்ற பக்தி கோஷம் எழுப்பியபடி சென்றனர். ஊர்வலத்தில் சிறுவர்- சிறுமிகளின் கோலாட்டம் நடந்தது. ஊர்வலம் கோட்டாறு, இடலாக்குடி, சுசீந்திரம், ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக முத்திரிகிணற்றங்கரையை அடைந்தது.

தொடர்ந்து தலைமைப்பதியில் பெரியரத வீதி மற்றும் சிறிய தெருவை சுற்றி வந்து தலைமைப்பதி முன்பு பகல் 11 மணி அளவில் ஊர்வலம் முடிவடைந்தது. ஊர்வலம் வரும் வழிகளில் அப்பகுதியை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நீர், மோர், சர்பத் மற்றும் உணவு பொட்டலங்களை வழங்கினர்.

ஊர்வலத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அவதார தின விழாவை முன்னிட்டு தலைமைப்பதி வளாகம் அய்யா வழி பக்தர்களால் நிரம்பி வழிந்தது. தலைமைப்பதியின் கிழக்கு வாசல் அருகில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பிலும் மற்றும் பல இடங்களிலும் பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்பட்டது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் போலீசார் செய்து இருந்தனர்.

Next Story