இன்று முதல் சேவையை தொடங்குகிறது கோலார் வழியாக யஷ்வந்தபுரம் - புதுடெல்லி இடையே வாராந்திர ரெயில் கே.எச்.முனியப்பா எம்.பி. தகவல்
கோலார் வழியாக பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் இருந்து புதுடெல்லிக்கு புதிய வாராந்திர ரெயில் இயக்கப்படுகிறது. அந்த ரெயில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் தனது சேவையை தொடங்க உள்ளதாக கே.எச்.முனியப்பா எம்.பி. கூறினார்.
கோலார் தங்கவயல்,
கோலார் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கே.எச்.முனியப்பா நேற்று கோலாரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோலார் தங்கவயல் மாரிக்குப்பம் ரெயில் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் வரை புதிய ரெயில் பாதை அமைக்க ரூ.293 கோடி நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடந்து வருகிறது. பங்காருபேட்டை ரெயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகள் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாளை(அதாவது இன்று) முதல் பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் இருந்து புதுடெல்லி வரை முதல் முறையாக கோலார் வழியாக ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. அந்த ரெயில் பெங்களூரு எலகங்கா, சிக்பள்ளாப்பூர், சிட்லகட்டா, சிந்தாமணி, சீனிவாசப்பூர், கோலார், பங்காருபேட்டை வழியாக புதுடெல்லிக்கு செல்கிறது.
இது வாராந்திர ரெயில் ஆகும். ஒவ்வொரு வாரமும் இந்த ரெயில் யஷ்வந்தபுரத்தில் இருந்து வியாழக்கிழமை அன்று புறப்படும். முதல் சேவை தொடங்க உள்ளதையொட்டி அது நாளை(அதாவது இன்று) ஒருநாள் மட்டும் செவ்வாய்க்கிழமை அன்று புறப்பட்டு செல்கிறது. இந்த ரெயிலுக்கு கர்நாடகத்தின் முதல் முதல்-மந்திரியான கே.சி.ரெட்டியின் பெயரை சூட்ட வேண்டும் என்று ரெயில்வே மந்திரியிடம் மனு கொடுத்துள்ளேன்.
மேலும் சீனிவாசப்பூரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் ரெயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதன்பிறகு அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த திட்டத்தை நிறைவேற்ற பலமுறை ரெயில்வே மந்திரியை சந்தித்து மனு கொடுத்தேன். அதன் பலனாக அவர், அந்த திட்டத்தை விரைவில் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு கே.எச்.முனியப்பா எம்.பி. கூறினார்.
Related Tags :
Next Story