நடன விடுதியில் காலில் மிதித்ததால் தகராறு பீர்பாட்டிலால் கல்லூரி மாணவரின் கழுத்து அறுப்பு 3 பேர் கைது


நடன விடுதியில் காலில் மிதித்ததால் தகராறு பீர்பாட்டிலால் கல்லூரி மாணவரின் கழுத்து அறுப்பு 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 March 2019 5:00 AM IST (Updated: 5 March 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

நடன விடுதியில் பீர்பாட்டிலால் கல்லூரி மாணவரின் கழுத்தை அறுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

மும்பை பாந்திராவில் உள்ள நடன விடுதிக்கு கல்லூரி மாணவர் குர்னிகல் சிங்(வயது20) என்பவர் சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்று இருந்தார். அங்கு நடனம் ஆடி கொண்டிருந்த குர்னிகல் சிங் வாலிபர் ஒருவரின் காலை தெரியாமல் மிதித்து விட்டதாக தெரிகிறது.

இதனால் கோபம் அடைந்த வாலிபர் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து அவரிடம் தகராறு செய்தார். இதனால் அவர்களுக்கு இடையே சண்டை உண்டானது.

இதில் கோபம் அடைந்த வாலிபர்கள் குர்னிகல் சிங்கையும், அவரது நண்பர்களையும் பிடித்து சரமாரியாக தாக்கினார்கள்.

அப்போது, அவர்களில் ஒருவர் திடீரென பீர் பாட்டிலை உடைத்து குர்னிகல் சிங்கின் கழுத்தில் குத்தினார். இதில், அவர் கழுத்து அறுபட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பிஓடி விட்டனர். இதற்கிடையே படுகாயம் அடைந்த குர்னிகல் சிங்கை அவரது நண்பர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு கழுத்தில் தையல்கள் போடப்பட்டது.

இது குறித்த புகாரின்பேரில் பாந்திரா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் நடன விடுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஒருவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அவர்களது பெயர் பாா்தீன் சையத்(19), முசேக் குரேஷி(21), அகமத் மெமோன் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story