சந்தேகத்தின்பேரில் பிடிபட்ட வெளிநாட்டுக்காரரிடம் போலீசார் 6 மணிநேரம் விசாரணை விக்ரோலி ரெயில் நிலையத்தில் பரபரப்பு


சந்தேகத்தின்பேரில் பிடிபட்ட வெளிநாட்டுக்காரரிடம் போலீசார் 6 மணிநேரம் விசாரணை விக்ரோலி ரெயில் நிலையத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 4 March 2019 10:45 PM GMT (Updated: 4 March 2019 7:37 PM GMT)

விக்ரோலி ரெயில் நிலையத்தில் வெளிநாட்டுக்காரரை பிடித்து போலீசார் சோதனை நடத்தியதால் பரபரப்பு உண்டானது.

மும்பை, 

மும்பையில் ரெயில் நிலையங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரித்து இருந்ததை அடுத்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இந்தநிலையில், மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து நேற்றுமுன்தினம் டிட்வாலா நோக்கி சென்ற மின்சார ரெயிலில் வெளிநாட்டுக்காரர் ஒருவர் பயணம் செய்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பயணி ஒருவர், அவரை தனது செல்போனில் படம் பிடித்து ரெயில்வே போலீசுக்கு அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து உஷாரான ரெயில்வே போலீசார் அந்த ரெயில் விக்ரோலி ரெயில் நிலையம் வந்ததும், அந்த ரெயிலில் பயணம் செய்த வெளிநாட்டுக்காரரை கீழே இறக்கி விசாரணை நடத்தினார்கள். மேலும் அவரது உடைமையில் வெடிபொருள் ஏதும் உள்ளதா? என மோப்ப நாய் மூலம் சோதனை போட்டனர். ஆனால் சந்தேகப்படும் வகையில் எதுவும் சிக்கவில்லை.

விசாரணையின் போது, அவர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பழ வியாபாரி என்பது தெரியவந்தது. அவர் சரியான ஆவணங்களை வைத்து இருந்தார். தொழில் விஷயமாக அவர் இந்தியாவுக்கு வந்திருந்தது தெரியவந்தது. இருப்பினும் அவரிடம் போலீசார் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

வெளிநாட்டுக்காரரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய இந்த சம்பவம் விக்ரோலி ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story