பண்ருட்டி அருகே, அமைச்சர்-எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் இடையே மோதல் - கட்சி அலுவலகம் சூறை, கடையடைப்பு


பண்ருட்டி அருகே, அமைச்சர்-எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் இடையே மோதல் - கட்சி அலுவலகம் சூறை, கடையடைப்பு
x
தினத்தந்தி 5 March 2019 4:00 AM IST (Updated: 5 March 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் அ.தி.மு.க. கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டது. இதை கண்டித்து சாலை மறியல், கடையடைப்பு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுப்பேட்டை,

கடலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் இருபிரிவாக செயல்பட்டு வருகிறார்கள். இதையடுத்து அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்கும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.பி. மற்றும் அவரது ஆதரவாளர்களான எம்.எல்.ஏ.க்கள் சத்யா பன்னீர்செல்வம் (பண்ருட்டி), முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில்), பாண்டியன் (சிதம்பரம்) ஆகியோர் பங்கேற்பதில்லை.

இந்தநிலையில் சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., தன்னுடைய தொகுதியில் வளர்ச்சி பணிகள் நடைபெற அமைச்சர் தடையாக இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். அதற்கு அமைச்சர் மறுப்பு தெரிவித்து வந்தார். இருப்பினும் இவர்களின் ஆதரவாளர்களிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று பண்ருட்டி தொகுதிக்கு உட்பட்ட ஒறையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக அருண்மொழிதேவன் எம்.பி., சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் வந்தனர். அப்போது அங்கிருந்த அமைச்சரின் ஆதரவாளர்களான அண்ணா கிராமம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் என்.டி.கந்தன், முன்னாள் தொகுதி செயலாளர் ராமசாமி, தொரப்பாடி நகர செயலாளர் கனகராஜ், வக்கீல் ஆனந்தன், வார்டு கவுன்சிலர் வனராஜ், முருகன் மற்றும் சிலர் எம்.பி.யின் காரை மறித்து, முகாமில் கலந்து கொள்ள எங்களுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை? என்று கேட்டனர்.

அவர்களை அருண்மொழிதேவன் எம்.பி. சமாதானப்படுத்தினார். இதையடுத்து அமைச்சரின் ஆதரவாளர்கள் கலைந்து சென்றனர். அதன்பிறகு மருத்துவ முகாம் நடந்தது. இதில் எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே நிகழ்ச்சி முடிந்ததும் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் அ.தி.மு.க. கட்சி அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்த அமைச்சரின் ஆதரவாளர்களிடம் ஏன்? இப்படி நடந்து கொண்டீர்கள் என்று தட்டிக்கேட்டனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் இருதரப்பினரும் நாற்காலிகளால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

இந்த மோதலில் அமைச்சரின் ஆதரவாளரான முன்னாள் தொகுதி செயலாளர் ராமசாமி சட்டை கிழிக்கப்பட்டது. அவரது காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரை கடலூர் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதேபோல் எம்.எல்.ஏ. ஆதரவாளரான ராஜா, புகழ் ஆகியோர் காயமடைந்து பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் கட்சி அலுவலகத்தில் இருந்த நாற்காலிகள் உடைக்கப்பட்டு, அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தன.

இதையடுத்து கட்சி நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அமைச்சரின் ஆதரவாளர்கள் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதேபோல் எம்.எல்.ஏ. ஆதரவாளர்களும் ஆன்-லைனில் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.

அதன்பிறகு கட்சி அலுவலகத்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுப்பேட்டையில் ஒன்றிய செயலாளர் கந்தன், நகர செயலாளர் கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தையொட்டி புதுப்பேட்டையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ததாக ஒன்றிய செயலாளர் கந்தன், நகர செயலாளர் கனகராஜ் உள்பட 400 பேர் மீது புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தையொட்டி புதுப்பேட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story