கோவைக்கு வாடகை காரில் வந்து ஜவுளிக்கடையில் பட்டு சேலைகள் திருடிய பெண் கைது - தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு
வாடகை காரில் வந்து கோவை காந்திபுரத்தில் உள்ள ஜவுளிக்கடையில் பட்டு சேலைகள் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை,
கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் ஏராளமான ஜவுளிக்கடைகள் உள்ளன. அதில் பிரபல ஜவுளிக்கடைக்கு நேற்று முன்தினம் 2 பெண்கள் சென்றனர். அவர்கள், அங்குள்ள பல்வேறு பிரிவுகளில் இருந்த துணிகளை பார்த்துவிட்டு, பட்டு சேலை பிரிவுக்கு சென்றனர்.
அங்கு விலை உயர்ந்த பட்டு சேலைகளை பார்வையிட்டனர். அப்போது எங்கள் வீட்டில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்காக பட்டு சேலைகளை எடுக்க வந்து உள்ளதாக விற்பனையாளரிடம் கூறினர். அவரும் ஏராளமான பட்டு சேலைகளை எடுத்து காண்பித்தார்.
அதை பார்த்துக் கொண்டு இருந்த 2 பெண்களும், சிறிது நேரம் கழித்து, பணம் குறைவாக இருப்பதால், ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு வெளியே சென்றனர். அவர்கள் அங்கிருந்து சென்றதும், கடை விற்பனையாளர், பட்டு சேலைகளை சரிபார்த்தார். இதில் 9 பட்டு சேலைகளை காணவில்லை. அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
உடனே அவர் கடை மேலாளரிடம் தெரிவித்தார். அவர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். இதில், பட்டு சேலை வாங்குவது போல் வந்த 2 பெண்கள் தான் 9 பட்டு சேலைகளை நைசாக திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் காட்டூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில் அந்த பெண்கள் 2 பேரும் டவுன்ஹால் பகுதிக்கு ஆட்டோவில் சென்றது தெரியவந்தது. உடனே அங்கு சென்று விசாரித்த போது அவர்கள் காந்திபுரம் பஸ் நிலையத்துக்கு சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் காந்திபுரம் சென்று, அங்கு பஸ் ஏற காத்திருந்த ஒரு பெண்ணை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அந்த பெண் மதுரை கே.கே.நகரை சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி சாந்தா (வயது 50) என்பதும், அவர், தனது சகோதரி கலாவுடன் (55) பட்டு சேலைகளை திருட வாடகை காரில் கோவை வந்ததும் தெரியவந்தது. கலா தப்பி ஓடி விட்டார்.
இதையடுத்து போலீசார் சாந்தாவை கைது செய்தனர். இவர்கள் 2 பேர் மீது ஏராளமான திருட்டு வழக்குகள் இருப்பதும், ஜவுளிக்கடையில் துணிகளை திருடுவதில் கைதேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கலாவை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story