பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தன: எனது மகன் சாயலில் இருக்கும் தத்து சிறுமிக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் கலெக்டரிடம், பெண் மனு
எனது மகன் சாயலில் இருக்கும் தத்தெடுக்கப் பட்ட சிறுமிக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என பெண், கலெக்டரிடம் மனு அளித்தார்.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, கலெக்டர் ராமன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். ஆற்காடு தாலுகா புங்கனூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வரி தனது கணவர் பாபுடன் கூட்டத்துக்கு வந்தார். ராஜேஸ்வரி, கலெக்டர் ராமனிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 2005-ம் ஆண்டு பிரசவத்துக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அறுவை சிகிச்சைக்கு பின்னர் நான் கண் விழித்தபோது பிரசவம் பார்த்த டாக்டர், பெண் குழந்தை பிறந்ததாக கூறினார். சிறிது நேரத்துக்கு பின்னர் மற்றொரு டாக்டர், எனக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக கூறினார்.
ஆனால் சிறிது நேரத்தில் ஒரு குழந்தை மட்டுமே பிறந்ததாக கூறி ஆண் குழந்தையை எனது கையில் கொடுத்தனர். இதுகுறித்து மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டதற்கு, பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தை தான் பிறந்தது என்று கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். எனது மகனுக்கு அரவிந்தன் என பெயர் சூட்டி வளர்த்து வருகிறேன்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் எனது உறவினருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறுமி, எனது மகன் அரவிந்தன் சாயலில் இருந்தாள். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோரிடம் கேட்டபோது கடந்த 2005-ம் ஆண்டு வசந்தபுரத்தில் உள்ள காப்பகத்தில் இருந்து அந்த குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருவதாக கூறினார்கள். மேலும் சிறுமி தொடர்பாக கூடுதல் தகவல்களை கேட்டதற்கு அந்த தம்பதியினர் சரியாக பதில் கூறவில்லை.
எனக்கு பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கலாம் எனவும், அந்த தம்பதியினர் வளர்த்து வரும் சிறுமி எனக்கு பிறந்த பெண் குழந்தையாக இருக்கும் என்ற சந்தேகம் உள்ளது. எனவே அந்த சிறுமிக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும். அந்த சிறுமி எனது மகளாக இருந்தால், உடனடியாக மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ராமன், இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
Related Tags :
Next Story