மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற கோவில் பூசாரியால் பரபரப்பு


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற கோவில் பூசாரியால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 March 2019 11:00 PM GMT (Updated: 4 March 2019 8:21 PM GMT)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற கோவில் பூசாரியால் பரபரப்பு ஏற்பட்டது.

தாமரைக்குளம்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றார். இதில் உடையார்பாளையம் அருகே உள்ள வாழைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கோவில் பூசாரியான முருகன்(வயது 45). தான் வசிக்கும் வீட்டுக்கு அருகே உள்ள கோவில் மண்டபத்தின் ஓரத்தில் தனது வீட்டுக்கு செல்ல பாதை உள்ளது என்றும், இந்நிலையில் அந்த பாதையில் முருகனின் உறவினர்கள் மற்றும் பங்காளிகள் தற்போது தகரம் கொண்டு பந்தல் அமைக்கும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற முருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை அவரது உறவினர்கள் தாக்கி,தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இது தொடர்பாக முருகன் தா.பழூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மனு கொடுக்க வந்த முருகன், தனது மனைவி தவமணி(32), மகள் தாரிணி(8), மகன் தருண்(5) மற்றும் முருகனின் தந்தை ஆகியோர் மீது மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முருகனை தடுத்து நிறுத்தி ஆட்டோவில் ஏற்றி போலீஸ் நிலையம் அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் முருகன் தனக்கு நீதி கிடைத்தால் மட்டுமே வருவதாக கூறி ஆட்டோவில் ஏற மறுத்ததால் போலீசார் அவரை வலுக்கட்டாயமாக ஏற்றி அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் முருகன் ஏற மறுத்து போராடினார். இதையடுத்து அவரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று ஆட்டோவில் ஏற்றினர். பின்னர் அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் அமைதியாக ஆட்டோவில் சென்றார். இந்த சம்பவத்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செந்துறை அருகே மணக்குடையான் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மராக்குறிச்சி கிராம மக்கள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். எங்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் முறையாக மின்வசதி கொடுக்காததால் மின்சார வாரியத்தினர் மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் நாங்கள் தண்ணீருக்காக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம். மேலும் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் பிடித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதேபோல் ஜெயங்கொண்டம் நகர விதவை பெண்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு மனு அளித்தனர். அதில், விதவை பெண்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை தடையின்றி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட துணை கலெக்டர் பூங்கோதை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பாலாஜி மற்றும் அனைத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story