மாவட்ட செய்திகள்

கடலூரில், கள்ள ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய பட்டதாரி பெண், சிறையில் அடைப்பு + "||" + In Cuddalore, stuck with counterfeit banknotes Graduate girl, imprisonment in prison

கடலூரில், கள்ள ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய பட்டதாரி பெண், சிறையில் அடைப்பு

கடலூரில், கள்ள ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய பட்டதாரி பெண், சிறையில் அடைப்பு
கடலூரில் கள்ள ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய பட்டதாரி பெண் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்து ஜெராக்ஸ் எந்திரம், கத்தரிக்கோல், வெள்ளை காகிதம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூர்,

கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது 42). இவரது மனைவி தமிழரசி (36). இவர் கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிவறை அருகில் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் மதியம் 1 மணி அளவில் சுடிதார் அணிந்து டிப்-டாப்பாக வந்த ஒரு பெண் ரூ.2 ஆயிரம் நோட்டை கொடுத்து சில்லரை கேட்டார்.

அந்த ரூபாய் நோட்டை வாங்கி பார்த்த அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கணவர் கொளஞ்சியிடம் இது பற்றி அவர் கூறினார். அவர் அந்த 2 ஆயிரம் ரூபாயை வாங்கி பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலைய போலீசாரிடம் கொடுத்தார். போலீசார் அந்த ரூபாய் நோட்டை பார்த்த போது அது கள்ள நோட்டு என்பது தெரிந்தது. இதையடுத்து அந்த பெண்ணை திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரய்யா தலைமையிலான போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் சிதம்பரம் மாரியப்பாநகர் 3-வது குறுக்குதெருவை சேர்ந்த ஆனந்த் மனைவி பரணிகுமாரி (35) என்று தெரிந்தது. அவரது பையை சோதனை செய்த போது அதில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் 33 இருந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வந்ததும், அதை தீர்க்க என்ன செய்வதென்று யோசித்த போது, யூ டியூப்பை பார்த்து கலர் ஜெராக்ஸ் எந்திரத்தில் ரூபாய் நோட்டுகளை அப்படியே வெள்ளை காகிதத்தில் அச்சடிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. இதன்படி கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை சிதம்பரத்தில் உள்ள ஒரு கடையில் வாங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்தது தெரிய வந்தது.

இதையடுத்து பரணிகுமாரியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கலர் ஜெராக்ஸ் எந்திரம், கத்தரிக்கோல், வெள்ளை காகிதம், 33 கள்ள ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை போலீசார் கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.

இது பற்றி துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி கூறுகையில், பரணிகுமாரிக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளது. இதற்கிடையே பரணிகுமாரி மகளிர் சுயஉதவிக்குழு கடன், வெளி நபர்களிடம் அதிக அளவில் கடன் வாங்கி உள்ளார். அந்த கடனை கட்ட முடியாமல் சிரமப்பட்டு வந்தார். இதனால் அவர் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். அவர் இந்த செயலில் ஈடுபட்ட உடனே கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.