மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: அமராவதி ஆற்றில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: அமராவதி ஆற்றில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 5 March 2019 4:30 AM IST (Updated: 5 March 2019 2:25 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அமராவதி ஆற்றில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்டவை தொடர்பாக 536 கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

நாம் தமிழர் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் நன்மாறன் தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், கரூர் நகராட்சியில் அண்ணா வளைவு முதல் ஐந்து ரோடு வரை சேதமடைந்திருந்த பாதாள சாக்கடையில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது பெயர்த்தெடுக்கப்பட்ட சேதமடைந்த சிமெண்டு குழாய்கள் மற்றும் தார்கப்பிகள் உள்ளிட்ட கழிவுகளை பசுபதிபாளையம் அமராவதி ஆற்று பாலத்தின் கீழ்புறத்தில் கொட்டிவிட்டு சென்றிருக்கின்றனர். இதனால் ஆறு மாசடைவதோடு நீர்வழித்தடம் தடுக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் அக்னிசட்டி எடுத்தல், தீர்த்தம் எடுத்தல், கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் ஆகியவை அந்த ஆற்றுபாலத்தின் கீழ் தான் நடைபெறுகிறது. எனவே ஆற்றில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

கரூர் மாவட்ட தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பொதுசெயலாளர் ஜி.பி.எஸ்.வடிவேலன் தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மனு கொடுத்தனர். அதில், வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்கிட வேண்டும். இயற்கை மரணத்திற்கு ரூ.5 லட்சம், விபத்து மரணத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கிட வேண்டும். வேலையில்லா காலத்திற்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.

சாமானிய மக்கள் நலக்கட்சி மாவட்ட செயலாளர் சண்முகம் உள்பட நிர்வாகிகள் கொடுத்த மனுவில், புஞ்சை புகளூர், தோட்டக்குறிச்சி, நெரூர் வடபாகம், வாங்கல் உள்ளிட்ட இடங்களில் காவிரியாற்றில் நடக்கும் மணல் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தாந்தோன்றிமலை ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்வழிப்பாதையை தூர்வார வேண்டும். பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

புலியூர் பேரூராட்சி செல்வநகர், பெரியார்நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாத வகையில் குண்டும்-குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மீனாட்சி, பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி கணேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story