2 ஆயிரம் துப்புரவு பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் கலெக்டரிடம் மனு


2 ஆயிரம் துப்புரவு பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 5 March 2019 4:30 AM IST (Updated: 5 March 2019 2:38 AM IST)
t-max-icont-min-icon

2 ஆயிரம் துப்புரவு பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் எஸ். சிவராசு தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.

அப்போது திருச்சி மாநகராட்சியின் 4 கோட்டங்களிலும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நுண் உரம் செயலாக்க மையங்களில் பணியாற்றி வந்த துப்புரவு பணியாளர்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் மாநகராட்சி நிர்வாகம் சுமார் 2 ஆயிரம் துப்புரவு பணியாளர்களை திடீரென்று எந்த வித முன்னறிவிப்பும் இன்றி வேலையில் இருந்து நிறுத்தி விட்டது. கேட்டால் தனியாரிடம் தாரை வார்த்து விட்டதாக மேல்மட்டத்தில் கூறுகிறார்கள். எனவே 2 ஆயிரம் பேருக்கும் மீண்டும் வேலை வழங்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

ஸ்ரீரங்கம் தாலுகா பழூர் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி என்ற கர்ப்பிணி தனது கணவர் சாவிலும், மாமியார் காணாமல் போனதற்கும் காரணமான உறவினர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி மனு கொடுத்தார். ரெயில்வே குட்ஷெட் லாரி டிரைவர்- கிளனர் நல சங்க துணை செயலாளர் சேட்டு முகமது முதலியார் சத்திரம் பகுதியில் நடந்த ஒரு கொலை சம்பவம் தொடர்பாக எங்கள் சங்கத்தின் தலைவர் சங்கர் வசிக்கும் வீட்டை காலி செய்ய சொல்லி மிரட்டுகிறார்கள். தேவையில்லாமல் மிரட்டி வரும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி மனு கொடுத்தார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் கிறிஸ்டி கொடுத்த மனுவில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. திருநங்கைகளுக்கு இலவச தொகுப்பு வீடு, நல வாரிய அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்றவை வழங்க வேண்டும் என கோரி சோனாலி தலைமையில் வந்த திருநங்கைகள் மனு கொடுத்தனர். 

Next Story