சிவகிரி அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி


சிவகிரி அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 4 March 2019 10:00 PM GMT (Updated: 2019-03-05T03:09:40+05:30)

சிவகிரி அருகே வாகனம் மோதி, தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

சிவகிரி,

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விசுவநாதபேரி ஜாகிர் உசேன் தெருவை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு. இவருடைய மகன் முருகன் (வயது 30). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் முருகன் நேற்று முன்தினம் சிவகிரி அருகே வாசுதேவநல்லூரில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து இரவு 9 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். உள்ளாருக்கு வடக்கே தென்காசி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, தனக்கு முன்பாக சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றார்.

அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அந்த வாகனத்தின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில், முருகன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அவரது மோட்டார்சைக்கிளும் அப்பளம் போல் நொறுங்கியது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகன் மீது மோதிவிட்டு சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர். வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story