பவானிசாகர் அருகே தெங்குமரஹடா வனச்சாலையை கடக்கும் நட்சத்திர ஆமைகள் வாகனங்களை கவனத்துடன் இயக்க வனத்துறையினர் வேண்டுகோள்


பவானிசாகர் அருகே தெங்குமரஹடா வனச்சாலையை கடக்கும் நட்சத்திர ஆமைகள் வாகனங்களை கவனத்துடன் இயக்க வனத்துறையினர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 4 March 2019 10:45 PM GMT (Updated: 2019-03-05T03:33:02+05:30)

பவானிசாகர் அருகே உள்ள தெங்குமரஹடா வனச்சாலையை நட்சத்திர ஆமைகள் கடப்பதால், அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் தங்களுடைய வாகனங்களை கவனத்துடன் இயக்க வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

பவானிசாகர்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பவானிசாகர் வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் மாயாறு ஓடுகிறது. இந்த நிலையில் மாயாற்று படுகையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் தற்போது நட்சத்திர ஆமைகள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆமைகள் வறட்சியான வனப்பகுதியில் நீரின்றி அதிக நாட்கள் வாழும் தன்மை கொண்டது என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

தற்போது பவானிசாகரில் இருந்து அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தெங்குமரஹடா வனக்கிராமத்துக்கு செல்லும் வனச்சாலையில் நட்சத்திர ஆமைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே இந்த வனச்சாலை வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில், ‘சாதாரண ஆமைகளும், நட்சத்திர ஆமைகளும் ஒரே குணம் உடையது. மருத்துவக்குணம் கொண்டது எனக்கூறி சீனா, மலேசியா போன்ற நாடுகளுக்கு நட்சத்திர ஆமைகள் கடத்தப்படுகின்றன. ஆனால் இந்த வகை ஆமையில் மருத்துவக்குணம் உள்ளதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இந்த ஆமை குஞ்சுகள் சர்வதேச மார்க்கெட்டில் இந்திய பண மதிப்பின்படி ரூ.30 ஆயிரம் வரையிலும், பெரியவகை ஆமைகள் ரூ.1 லட்சம் வரையிலும் விலைபோவதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஆமைகளை கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,’ என்றனர்.


Next Story