கவுந்தப்பாடி அருகே மோட்டார்சைக்கிள்–பஸ் மோதல்; ஆசிரியர் சாவு
கவுந்தப்பாடி அருகே மோட்டார்சைக்கிளும் பஸ்சும் மோதிக்கொண்ட விபத்தில் ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.
கவுந்தப்பாடி,
தேனி மாவட்டம் சந்தபாளையம் ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் ரவி. அவருடைய மகன் ரகு (வயது 29). இவர் ஈரோடு மாவட்டம் கோபி அருகே தங்கியிருந்து அங்குள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி குடும்பத்தினர் ஊத்துப்பட்டியில் உள்ளனர்.
ரகு கவுந்தப்பாடி சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு கோபிக்கு மோட்டார்சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். கவுந்தப்பாடி–கோபி ரோட்டில் ஆவாரங்காட்டூர் பிரிவில் சென்றபோது மோட்டார்சைக்கிளும் எதிரே மைசூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்த தனியார் பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் ரகு தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரகு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி அறிந்ததும் ரகுவின் உறவினர்கள் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து ரகுவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது பார்க்க பரிதாபமாக இருந்தது.