குடிசைமாற்று வாரிய வீடுகள் ஒதுக்கீடு செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் தர்ணா


குடிசைமாற்று வாரிய வீடுகள் ஒதுக்கீடு செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் தர்ணா
x
தினத்தந்தி 4 March 2019 10:21 PM GMT (Updated: 2019-03-05T03:51:38+05:30)

குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் வீடுகளில் ஒதுக்கீடு செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் முன்னிலை வகித்தார். பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.

திருப்பூர் பகுதியை சேர்ந்த திருநங்கைகள் 70–க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு வீட்டு வசதி கேட்டு காலை 11.30 மணிக்கு திரண்டு வந்து திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு வீட்டு வசதி செய்ய வேண்டும். இல்லையென்றால் தங்களை கருணை கொலை செய்யுங்கள் என்று கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி பூங்கோதை வந்து திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது திருநங்கைகள் கூறியதாவது:–

திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததால் கடந்த 2015–ம் ஆண்டு எங்களுக்கு பொங்கலூர் ஒன்றியம் நாச்சிப்பாளையத்தில் இடம் ஒதுக்கி, வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டதுடன், 51 பேருக்கும் தலா ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொடுப்பதற்கான உத்தரவையும் எங்களுக்கு கொடுத்தார்கள். ஆனால் அதன்பிறகு சம்பந்தப்பட்ட இடம் குறித்து கோர்ட்டில் வழக்கு இருப்பதால் எங்களுக்கு வீடு கிடைக்கவில்லை. அதன்பின்னர் எங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக கட்டப்படும் குடியிருப்பில் வீடு ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

ஆனால் தற்போது எங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக நெருப்பெரிச்சலில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் வீடுகள் ஒதுக்குவதற்கு ஒருவர் ரூ.1½ லட்சத்தை செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். எங்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்படும் நெருப்பெரிச்சலில் கட்டப்படும் வீடுகளில் வீடு ஒதுக்க வேண்டும். இப்போது எங்களுக்கு வீட்டை வாடகைக்கு கொடுக்க பலர் மறுக்கிறார்கள். நாங்களும் இந்த சமூகத்தில் தான் இருக்கிறோம். எங்களை மட்டும் ஒதுக்குவது ஏன்?. இப்போது அரசும் எங்களை ஒதுக்கி வைக்கிறது. வீடு ஒதுக்காவிட்டால் எங்களை கருணை கொலை செய்து விடுங்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பின்னர் முக்கிய நிர்வாகிகள் 5 பேரை மட்டும் கலெக்டரிடம் மனு கொடுக்க அனுமதித்தனர். கூட்ட அரங்கில் சென்ற திருநங்கைகள் கலெக்டரின் இருக்கைக்கு முன்பு விழுந்து தங்களுக்கு வீட்டு வசதி வழங்குமாறு முறையிட்டனர். சம்பந்தப்பட்ட குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறினார். அதேநேரத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருந்த திருநங்கைகள் அனைவரும் கூட்ட அரங்குக்கு முன்பு திரண்டனர். போலீசார் அவர்களை கூட்ட அரங்குக்குள் அனுமதிக்க வில்லை. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தங்களுக்கு ஒரு தீர்வை அதிகாரிகள் கூறினால் தான் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து செல்வோம் என்று கூறி அனைவரும், கூட்ட அரங்கு முன்பு தரையில் அமர்ந்து இருந்தனர். அதன்பிறகு குடிசை மாற்று வாரிய(கோவை) உதவி பொறியாளர் கொம்பையா பாண்டியன் வந்து திருநங்கைகளிடம் பேசினார். சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு, அதன் பேரில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், இதற்கு ஒரு வாரம் பொறுத்திருக்க வேண்டும் என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட திருநங்கைகள் அனைவரும் சமாதானம் அடைந்து மதியம் 1.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டனர்.


Next Story