காளையார்மங்கலம் கிராமத்திற்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுகோள்


காளையார்மங்கலம் கிராமத்திற்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுகோள்
x
தினத்தந்தி 5 March 2019 3:57 AM IST (Updated: 5 March 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

காளையார்மங்கலம் கிராமத்திற்கு குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று அந்த கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. அதில் கலெக்டர் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அந்த மனுக்கள் மீது சிறப்பு கவனம் எடுத்து உரிய நலத்திட்டங்களை ஒருவார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பின்னர் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் வேலைவாய்ப்பு இலவச வீட்டுமனைப் பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோருதல், வங்கிக் கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் எந்திரம் வழங்கக் கேட்டல், ஆக்கிரமிப்பு அகற்ற கேட்டல், பட்டா ரத்து தொடர்பான மேல்முறையீடு, மின் இணைப்பு உள்பட 468 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் மீது ஒருமாத காலத்திற்குள் உரிய தீர்வு வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர், சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதல்–அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நீரில் மூழ்கி இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் மின்சாரம் தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை என மொத்தம் 2 பயனாளிகளுக்கு ரூ.1.50 லட்சத்திற்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார் மற்றும் அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காளையார்மங்கலம் கிராமமக்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில கூறியுள்ளதாவது, எங்கள் கிராமத்தில் குடிநீருக்காக கடந்த 6 மாதத்திற்கு முன்பு புதிய மின்மோட்டார் அமைக்கப்பட்டது. அது ஒரு வாரத்திலேயே பழுதடைந்து விட்டது.

இதுகுறித்து பலமுறை நாங்கள் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நாங்கள் குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதி அடைந்து வருகிறோம். எனவே எங்களுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.


Next Story