நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது; நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் சஞ்சய்தத் பேட்டி


நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது; நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் சஞ்சய்தத் பேட்டி
x
தினத்தந்தி 4 March 2019 11:30 PM GMT (Updated: 4 March 2019 10:56 PM GMT)

பா.ஜனதாவின் 5 ஆண்டுகால ஆட்சியில் நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது. நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் கூறினார்.

விருதுநகர்,

காங்கிரஸ் கட்சி சார்பில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விருதுநகரில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர்கள் தளவாய்பாண்டியன், ராஜாசொக்கர் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

மேலிட பொறுப்பாளரும் அகில இந்திய செயலாளருமான சஞ்சய்தத், கட்சியின் செயல் தலைவரும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான மயூரா ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் சிவகாசி முன்னாள் நகரசபை தலைவர் ஞானசேகரன், விருதுநகர் நகர தலைவர் வேலுமுத்து, நகரசபை முன்னாள் துணை தலைவர் பாலகிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற சஞ்சய்தத் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதாவின் 5 ஆண்டு கால ஆட்சியில் நாடு 50 வருடம் பின்னோக்கி சென்று விட்டது. பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் அனைத்து தரப்பினரும் பெரும் பாதிப்புக்குள்ளாகி விட்டனர்.

புலவாமா தாக்குதல் குறித்து 3 நாட்களுக்கு முன்பே தகவல் தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் 40 ராணுவ வீரர்களை இழந்தோம். விமானப்படை தாக்குதல் தொடுக்க வேண்டிய சூழல் வந்தது. ராணுவம் இந்தியாவுக்கு சொந்தமானதே தவிர பா.ஜனதா ராணுவம் அல்ல. பிரதமர் மோடி புலவாமா தாக்குதல் குறித்து கவலைப்படாமல் பிரசாரத்தில் ஈடுபட்டார். நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story