ரொட்டி– பால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
ரொட்டி–பால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி,
புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
புதுச்சேரி கல்வித்துறையில் ரொட்டி–பால் ஊழியர்கள் 2003–ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்கள். மொத்தம் 1,020 பேர் பணியாற்றி வருகிறார்கள். புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் 850 பேர் பணிபுரிகிறார்கள்.
இவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரத்து 450 வழங்கப்பட்டு வந்தது. அவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யும்படி கேட்டு வந்தனர். ஆனால் அவர்களுக்கு இப்போது கொடுக்கும் சம்பளத்தைக்கூட சரியாக வழங்காமல் இழுத்தடித்து வருகிறார்கள்.
கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை. கல்வித்துறையில் அட்டெண்டர்போல் பல பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆனால் ஊதியம் வழங்கவில்லை. இதனால் அவர்கள் போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
அவர்களுடைய கோரிக்கையை அரசு இதுவரை கண்டுகொள்ளவில்லை. உடனடியாக அரசு கவனம் செலுத்தி அவர்களுடைய பிரச்சினையை உடனடியாக தீர்க்க முன்வரவேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.