அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பிரதமரின் ஓய்வூதிய திட்டம் தொடக்க விழா - அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார்
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பிரதமரின் ஓய்வூதிய திட்டம் தொடக்க விழா மற்றும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி தேனியில் நடந்தது.
தேனி,
பிரதமரின் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் (பிரதம மந்திரி சரம் யோகி மன்தான்) பிரதமர் நரேந்திரமோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் தொடர்பாக பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் தொடக்க விழா நடந்தது.
அதன்படி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திட்டத்தின் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். தேனி எம்.பி. பார்த்திபன், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மண்டல தொழிலாளர் ஆணையர் அண்ணாத்துரை திட்டம் குறித்து விளக்கம் அளித்து பேசினார்.
விழாவில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரையுள்ள அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் இணையலாம். தொழிலாளர்கள் சிறு தொகையை மாதாந்திர சந்தாவாக பணிக்காலத்தில் செலுத்துவதன் மூலம் 60 வயதை கடந்த பின்னர் அவர்களுக்கு மாதந்தோறும் நிலையான ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மத்திய அரசும் இந்த திட்டத்துக்காக தொழிலாளர்கள் செலுத்தும் சந்தாவுக்கு இணையான தொகையை தனது பங்காக தொழிலாளர்களின் ஓய்வூதிய கணக்கில் செலுத்தும்.
60 வயதை கடந்த ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களின் இறப்புக்கு பிறகு அவர்களுடைய கணவன் அல்லது மனைவிக்கு 50 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். 60 வயதுக்கு முன்பாக இறக்க நேரிட்டால் அவரின் கணவர் அல்லது மனைவி இந்த திட்டத்தில் இணைந்து தொடர்ந்து சந்தா செலுத்த முடியும். தொழிலாளர்கள் மற்றும் அவரின் துணைவர் இறப்புக்கு பிறகு தொகை முழுவதும் இந்த திட்டத்தின் நிதியில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்துக்காக இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலமாக சுய சான்றிதழ் வழங்கும் வசதிகள் செய்யப்பட உள்ளது. அமைப்பு சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போர், வருமான வரி கட்டுபவர்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது. இத்திட்டத்தில் சேர்வதற்கு எல்.ஐ.சி. மற்றும் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் இணையதளங்களில் பதிவு செய்ய வேண்டும். இந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்வதற்கு ஆதார் அட்டை, செல்போன் எண், வங்கி கணக்கு அவசியம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தொழிலாளர் உதவி ஆணையர் ராஜ்குமார் வரவேற்றார். முடிவில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா நன்றி கூறினார். விழாவில் வருங்கால வைப்புநிதி அமலாக்க அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story