ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை வைத்து மோடி ஓட்டு வாங்க நினைக்கிறார் - காங்கிரஸ் தேசிய செயலாளர் குற்றச்சாட்டு


ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை வைத்து மோடி ஓட்டு வாங்க நினைக்கிறார் - காங்கிரஸ் தேசிய செயலாளர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 6 March 2019 4:00 AM IST (Updated: 5 March 2019 11:18 PM IST)
t-max-icont-min-icon

ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை வைத்து பிரதமர் மோடி ஓட்டு வாங்க நினைக்கிறார் என காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் கூறினார்.

ராமநாதபுரம்,

மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் நடைபெற்றது. செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மலேசியா பாண்டியன் எம்.எல்.ஏ., அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் செல்லத்துரை அப்துல்லா, செந்தாமரை கண்ணன் மற்றும் சாயல்குடி வேலுச்சாமி, மாவட்ட துணைத் தலைவர் முத்துகிருஷ்ணன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் கோபி வரவேற்றார்.

கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய செயலாளரும், மத்திய பார்வையாளருமான சஞ்சய்தத் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி கடந்த 6 மாத காலமாக தயாராகி வருகிறது. மாவட்ட வாரியாக மத்திய பார்வையாளர்கள் நேரில் சென்று பூத் கமிட்டி ஏஜெண்டுகளை சந்தித்து வருகிறோம். மக்களின் விருப்பத்தை அறிந்து தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறோம். பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, தமிழக வளர்ச்சிக்காக எந்த சிறப்பு திட்டத்தினையும் வழங்க வில்லை. மத்திய அரசு தரவேண்டிய நிதியை கூட வழங்கவில்லை. மத்திய அரசின் தவறான பொருளாதார நடவடிக்கைகளால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது. கஜா புயலால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பெரிய சேதம் ஏற்பட்ட போது இங்கு வர நேரம் இல்லாத பிரதமர் மோடி தற்போது தேர்தலுக்காக அடிக்கடி தமிழகம் வருகின்றார். புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்களை பிரதமர் மோடி இதுவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை.

தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோரை பிரதமர் மோடி ரிமோட் மூலம் இயக்குகின்றார். பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்த இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., இருவரையும் ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது. இவர்களது ஆட்சியில் தமிழக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். ஆனால் அமைச்சர்களோ ஊழல் செய்து சம்பாதிப்பதிலேயே குறியாக உள்ளனர். பிரதமர் மோடி, அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்குத்தான் பிரதமராக உள்ளார். ஏழை, எளிய மக்களை பற்றி அவர் கவலைப்பட வில்லை. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ரபேல் விமான ஊழலில் பிரதமர் மோடிக்கு நேரடி தொடர்பு உள்ளது. மத்திய பா.ஜ.க., மாநில அ.தி.மு.க. அரசுகளை விமர்சித்து வந்த பா.ம.க. அவர்களுடனேயே ஊழல் கூட்டணி அமைத்துள்ளார்.

இந்த கூட்டணி வெற்றி பெறாது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களிலும் அமோக வெற்றி பெறும். தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க பாடுபடும். நாட்டை பாதுகாக்க ஜனநாயகத்தை நிலை நிறுத்த ராகுல்காந்தி பிரதமராக வர வேண்டும். காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை வைத்து ஓட்டு வாங்க மோடி முயற்சிக்கிறார்.

காங்கிரஸ் தொண்டர்கள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ரமேஷ்பாபு, விக்டர், சிறுபான்மை பிரிவு ஏ.ஜே.ஆலம், பாம்பன் ஆம்ஸ்ட்ராங், காருகுடி சேகர், மேகநாதன், ஆர்ட் கணேசன், திருப்புல்லாணி வட்டார தலைவர் சேது பாண்டியன், துல்கிப், செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம், சரவண காந்தி, ஆதி, மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story