அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் - அடையாள அட்டைகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்


அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் - அடையாள அட்டைகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்
x
தினத்தந்தி 5 March 2019 10:30 PM GMT (Updated: 2019-03-05T23:45:05+05:30)

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்திற்கான அடையாள அட்டையை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை,

நாடு முழுவதும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதையொட்டி தொழிலாளர் நலத்துறை சார்பில், சிவகங்கை மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்ட தொடக்க விழா நிகழ்ச்சி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார்.

இதில் கலந்து கொண்ட அமைச்சர்அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான அடையாள அட்டைகளை வழங்கி பேசியதாவது:- அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3ஆயிரம் வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். 18 வயதிலிருந்து 40 வயது வரை உள்ள தொழிலாளர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவராவார். குறிப்பாக விவசாயப் பணிகளை மேற்கொள்பவர்களும் இந்த திட்டத்தில் உறுப்பினர் ஆகலாம்.

18 வயது தொடக்கத்தில் தொழிலாளராக பணிபுரியும் போது மாதம் ரூ.55 கட்டி தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு உறுப்பினர் கட்டும் பணத்திற்கு நிகராக மத்திய அரசு அவர் கணக்கில் அதற்குரிய பங்குத் தொகையை வங்கியில் செலுத்தும். இதில் ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு இருந்தால் உறுப்பினராகச் சேரலாம்.

4 ஆண்டிற்கு ஒருமுறை ரூ.10 வீதம் உயர்ந்து 40 வயது வரை உறுப்பினர் சந்தா தொகையை மாதாமாதம் கட்டி வரவேண்டும். அதற்கு நிகராக மத்திய அரசு தொகையை வங்கிக் கணக்கில் செலுத்திவிடும். 40 வயது முடிவுற்றவுடன் பணம் கட்டத் தேவையில்லை. 60 வயது பூர்த்தியானவுடன் தகுதியுடைய உறுப்பினர்களுக்கு மாதா மாதம் ரூ.3 ஆயிரம் வங்கிக் கணக்கில் ஓய்வூதியமாக வரவு வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 20 நபர்களுக்கு அடையாள அட்டைகளை அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி, வருங்கால வைப்பு நிதி அலுவலக உதவி ஆணையர் சாஜி, குன்றக்குடி வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மைய முதல்வர் செந்தூர்குமரன், அமலாக்க அலுவலர் சுந்தன், கூட்டுறவு விற்பனை பண்டக சாலை சங்கத்தலைவர் ஆனந்தன், கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் சசிக்குமார், ராஜா, பலராமன், பாண்டி, ஜெயப்பிரகாஷ், மோகன் மற்றும் அரசு அலுவலர்கள், அமைப்பு சாரா தொழிலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story