கொள்ளிடம் அருகே பரபரப்பு: டாஸ்மாக் கடை கட்டும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்


கொள்ளிடம் அருகே பரபரப்பு: டாஸ்மாக் கடை கட்டும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்
x
தினத்தந்தி 6 March 2019 4:30 AM IST (Updated: 6 March 2019 12:05 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே டாஸ்மாக் கடை கட்டும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொள்ளிடம்,

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கோதண்டபுரம் கிராமத்தில் மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் கால்நடை மருத்துவமனைக்கு எதிரே கடைத்தெருவை ஒட்டி உள்ள நிலத்தில் நேற்று திடீரென டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் நேற்று பொக்லின் எந்திரத்துடன் வந்து நிலத்தை சமன் செய்து டாஸ்மாக் கடை கட்டும் பணியை தொடங்கினர்.

இந்த தகவலை அறிந்த கோதண்டபுரம் வணிகர் சங்க தலைவர் பஞ்சுசெல்வராஜ் தலைமையில், செயலாளர் மூர்த்தி, துணை தலைவர் சிவக்குமார் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு டாஸ்மாக் கடை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டு கட்டுமான பணியை தடுத்து நிறுத்தினர்.

இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் தாங்கள் கொண்டு வந்த சிமெண்டு மூட்டைகள் மற்றும் கட்டுமான பொருட்களை ஒரு சரக்கு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து திரும்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து வணிகர் சங்க தலைவர் கூறுகையில், மிகவும் முக்கியமான இடத்தில் யாருக்கும் தெரியாமல் டாஸ்மாக் கடை கட்டும் பணியை தொடங்கி உள்ளனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் நாங்கள் அங்கு சென்று கட்டிடம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி விட்டோம்.

இதையும் மீறி கட்டும் முயற்சியில் ஈடுபட்டால் கட்டிடத்தை ஆரம்ப நிலையில் தடுத்து நிறுத்துவதுடன், அதனை கண்டித்து தீக்குளிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

டாஸ்மாக் கடை கட்டும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்திய சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story