நெல்லையில் பரபரப்பு, 2 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - கணக்கில் வராத ரூ.1 லட்சம் சிக்கியது


நெல்லையில் பரபரப்பு, 2 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - கணக்கில் வராத ரூ.1 லட்சம் சிக்கியது
x
தினத்தந்தி 5 March 2019 11:15 PM GMT (Updated: 5 March 2019 6:37 PM GMT)

நெல்லையில் 2 அரசு அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.1½ லட்சம் சிக்கியது.

நெல்லை,

நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு அரசு நகர் ஊரமைப்புத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் உள்ளூர் திட்ட குழும உறுப்பினர்-செயலர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த 2 அலுவலகங்களில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீட்டுமனை மற்றும் பெரிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படும். இங்கு விளாத்திகுளம் மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்த புரோக்கர்கள் நேற்று லஞ்சப்பணத்துடன் வந்து இருப்பதாக நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா தலைமையில் போலீசார் நேற்று மாலை 2 அலுவலகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஊரமைப்புத்துறை மண்டல துணை இயக்குனர் நாகராஜன் அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த அனைத்து ஊழியர்கள், விண்ணப்பிக்க வந்திருந்த பொதுமக்கள் மற்றும் புரோக்கர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மனு கொடுக்க வந்தவர்கள் பணம் ஏதும் வைத்துள்ளனரா? எனவும் போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது ஊழியர்களை வெளியே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. பெண் ஊழியர்கள் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்த முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றி, பணம் இருப்பு பற்றியும் ஆய்வு செய்தனர். மேலும், அலுவலக வளாகத்தில் நின்ற கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சுமார் மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை இரவு 10 மணிக்கு மேலும் நீடித்தது.

இச்சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த பணம் பெறப்பட்டதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த அதிரடி சோதனை நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story