திருவாரூரில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்ட அடையாள அட்டை கலெக்டர் வழங்கினார்


திருவாரூரில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்ட அடையாள அட்டை கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 5 March 2019 10:30 PM GMT (Updated: 5 March 2019 6:59 PM GMT)

திருவாரூரில் பாரத பிரதமர் அமைப்பு சாரா தொழிலாளர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கான அடையாள அட்டையை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.

திருவாரூர்,

பாரத பிரதமர் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கான அடையாள அட்டையை கலெக்டர் ஆனந்த் பயனாளிகளுக்கு வழங்கினார்.

பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் திட்டத்தின் மூலமாக ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் மாத வருமானம் ரூ.15 ஆயிரம் வரை பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சுயவிருப்பத்தின்படி இணைந்து தொடர்ச்சியாக சந்தா செலுத்துவதன் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும்.

வீட்டு வேலை செய்பவர்கள், சுமை துாக்கும் தொழிலாளர்கள், தெரு வியாபாரிகள், செங்கல் சூளை தொழிலாளிகள், செருப்பு தைக்கும் தொழிலாளிகள், சலவை தொழிலாளிகள், விவசாய தொழிலாளிகள், கட்டிட தொழிலாளிகள் மற்றும் பிற அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம். வயது வரம்பு 18 வயது முதல் 40 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் இணையும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ரூ.55 முதல் ரூ.200 வரை மாதாந்திர சந்தாவாக தங்களின் வாழ்நாட்களில் செலுத்துவதன் மூலம் 60 வயதை கடந்த பின்னர் அவர்களுக்கு மாதந்தோறும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு தொழிலாளர்கள் செலுத்தும் சந்தாவிற்கு இணையான தொகையை தனது பங்காக மாதந்தோறும் தொழிலாளர்களின் ஓய்வூதிய கணக்கில் செலுத்தும்.

60 வயதை கடந்த ஓய்வூதியம் பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் இறப்பிற்கு பிறகு அவரின் கணவன் அல்லது மனைவிக்கு 50 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். முறையாக சந்தா செலுத்தும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 60 வயதுக்கு முன்பாக இறக்க நேரிட்டால் அவரின் கணவன், மனைவி இந்த திட்டத்தில் தொடர்ந்து சந்தா செலுத்த இயலும்.

இத்திட்டத்தில் இணைய விரும்பும் தொழிலாளர்கள் அவர்களின் ஆதார் மற்றும் வங்கி கணக்கு விவரங்களுடன் கையொப்பமிட்டு அருகில் உள்ள பொது சேவை மையத்தினை அணுகி தங்களின் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், செல்போன் எண் மற்றும் முதல் சந்தா அளிக்கும் பட்சத்தில் உடனடியாக பயனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, தொழிலாளர் துறை உதவி ஆணையர் பாஸ்கரன், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story