பொள்ளாச்சி அருகே குஞ்சிபாளையத்தில் பெண் அடித்துக் கொலை - போலீசார் விசாரணை


பொள்ளாச்சி அருகே குஞ்சிபாளையத்தில் பெண் அடித்துக் கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 6 March 2019 4:30 AM IST (Updated: 6 March 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே குஞ்சிபாளையத்தில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள கெட்டிமல்லன்புதூரை சேர்ந்தவர் நல்லுசாமி. கூலி தொழிலாளி. இவரது மனைவி பொன்னுத்தாய் (வயது 55). கூலி தொழிலாளி. இவர்களுக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் பொன்னுத்தாய் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பகுதிகளில் உள்ள தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு ஆனைமலையை சேர்ந்த ஒரு பெண் தொழிலாளி மூலம் வேலைக்கு சென்று வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி வேலைக்கு சென்ற அவர் மாலை 6 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மகன்கள் ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் குஞ்சிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் தென்னை நார் தொழிற்சாலையில் அழுகிய நிலையில் மூதாட்டி ஒருவர் பிணமாக கிடப்பதாக பொள்ளாச்சி நகர மேற்கு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் காணாமல் போன கெட்டிமல்லன்புதூரை சேர்ந்த பொன்னுத்தாய் என்பது தெரியவந்தது. மேலும் அவரது முகம் அடித்து சிதைக்கப்பட்டு இருந்தது. மேலும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததால் யாரோ? அவரை அடித்து கொலை செய்து இருக்கலாம் என தெரியவருகிறது. மேலும் அவர் அணிந்திருந்த தாலி செயின், கம்மல், மூக்குத்தி ஆகியவை திருடுபோனதும் தெரியவந்தது. எனவே நகைக்காக கொலை நடந்ததா? என்ற கோணத்திலும், அங்கு கிடைத்த தடயங்களை கைப்பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை நடந்த தொழிற்சாலையில் பணிகள் நடந்து 15 நாட்களுக்கு மேலாகிறது. இதனால் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் தொழிற்சாலைக்கு வேலைக்கு அழைத்து வருவது போன்று, பொன்னுத்தாயை அழைத்து வந்து மர்ம ஆசாமிகள் அவரிடம் நகையை பறிக்க முயற்சி செய்திருக்கலாம். அவர் தடுக்க முயன்றதால் கை, கால்களை கட்டி நகைகளை பறித்து விட்டு, கொலை செய்து விட்டு தப்பி சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.

அவர் கொண்டு வந்த சாப்பாட்டு கூடை மற்றும் செருப்பு அங்கேயே கிடந்தது. இதனால் இங்கு தான் கொலை நடந்திருக்க வேண்டும்.

எனவே இந்த சம்பவத்தில் பொன்னுத்தாயிடன் வேலை பார்க்கும் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story