குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறாததால் தாலுகா அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறாததால் தாலுகா அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 March 2019 11:00 PM GMT (Updated: 2019-03-06T01:11:22+05:30)

குறைதீர்வுநாள் கூட்டம் நடைபெறாததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் மாதந்தோறும் முதல் செவ்வாய்க்கிழமைதோறும் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடத்தப்படும். அதன்படி நேற்று, முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி குறைதீர்வுநாள் கூட்டம் என நம்பி ஏராளமான விவசாயிகள் பல்வேறு கிராமங்களிலிருந்து வந்திருந்தனர்.

ஆனால் வழக்கமாக கூட்டம் நடைபெறும் அரங்கம் பூட்டப்பட்டு இருந்தது. காலை 10.30 மணியளவில் தொடங்க வேண்டிய குறைதீர்வு நாள் கூட்டம் 11.30 மணி வரை நடைபெறவில்லை. கூட்ட அரங்கமும் திறக்கப்படவில்லை. கூட்டம் நடைபெறுமா? இல்லையா? என்பது குறித்து அங்குள்ளவர்களிடம் விவசாயிகள் கேட்டபோது அது குறித்தும் உறுதியான தகவல் கிடைக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் அதே வளாகத்தில் உள்ள திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்துக்கு சென்று அங்கு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் நார்த்தம்பூண்டி சிவா, சந்திரசேகர், சரவணன், துரைப்பாண்டி உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அப்போது தாலுகா அளவிலான விவசாயிகள் கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலத்தை முறையாக அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story