மாவட்ட மாறுதல் வழங்கியதை கண்டித்து 2-வது நாளாக வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிருப்பு போராட்டம்


மாவட்ட மாறுதல் வழங்கியதை கண்டித்து 2-வது நாளாக வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 5 March 2019 11:00 PM GMT (Updated: 2019-03-06T01:20:44+05:30)

மாவட்ட மாறுதல் வழங்கியதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-வது நாளாக வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை,

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள தாசில்தார்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் செய்யப்பட்டனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 47 தாசில்தார்கள், 29 வட்டார வளர்ச்சி அதிகாரிகள் திருச்சி, சிவகங்கை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பணிமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டு, உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர். இதை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், தமிழ்மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் நேற்று முன்தினம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலு வலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் தங்களது பணியை புறக்கணித்து கலந்து கொண்டனர்.

இந்த உள்ளிருப்பு போராட்டத்தினால் கலெக்டர் அலு வலகம், தாசில்தார் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலு வலகம் உள்ளிட்ட அலுவல கங்களில் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இதேபோல புதுக்கோட்டை, அறந்தாங்கி, கந்தர்வகோட்டை, மணமேல்குடி, விராலிமலை, குளத்தூர், பொன்னமராவதி ஆகிய தாலுகா அலுவலகங்களில் அரசு அதிகாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தாசில்தார், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பணிமாறுதல் செய்த உத்தரவை இந்திய தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் திரும்ப பெறும் வரை இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என கோஷங்களை எழுப்பினர். 

Next Story