180 விவசாயிகளுக்கு ரூ.1½ கோடியில் வேளாண் கருவிகள் கலெக்டர் அன்பழகன் வழங்கினார்


180 விவசாயிகளுக்கு ரூ.1½ கோடியில் வேளாண் கருவிகள் கலெக்டர் அன்பழகன் வழங்கினார்
x
தினத்தந்தி 6 March 2019 4:00 AM IST (Updated: 6 March 2019 1:32 AM IST)
t-max-icont-min-icon

180 விவசாயிகளுக்கு ரூ.1½ கோடி மதிப்பிலான வேளாண் கருவிகளை கலெக்டர் அன்பழகன் வழங்கினார்.

கரூர்,

கரூர் மாவட்ட வேளாண்மை துறையின் சார்பில், கூட்டுப்பண்ணைய திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கும் விழா கரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், 20 சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து விவசாய ஆர்வலர் குழுக்கள் உருவாக்கப்படுகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் 125 விவசாய ஆர்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 விவசாய ஆர்வலர் குழுக்களை ஒருங்கிணைத்து தலா 100 விவசாயிகளை கொண்ட 25 உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இந்த குழுக்களுக்கு கூட்டுப்பண்ணைய தொகுப்பு நிதியின் கீழ் தலா ரூ.5 லட்சம் மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கூட்டுப்பண்ணைய திட்டத்தின்கீழ், 2,400 விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் 135 வேளாண் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல இந்த ஆண்டும் 2,500 விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.1 கோடியே 25 லட்சம் மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

விழாவில், 180 விவசாயிகளுக்கு ரூ.1½ கோடி மதிப்பிலான 32 வேளாண் கருவிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை எந்திரங்களை கலெக்டர் வழங்கினார். இதில், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜெயந்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) என்.ஆர்.முருகானந்தம், உதவி இயக்குனர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story