குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 March 2019 4:30 AM IST (Updated: 6 March 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தியூர்,

அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள கிராமம் குரும்பபாளையம். இந்த கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்காக அங்கு ஒரு மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குடிநீர் தொட்டி மூலம் வீதிகளில் பொதுக்குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்காக வீதிகளில் மொத்தம் 6 பொதுக்குழாய்கள் வைக்கப்பட்டு உள்ளன.

வீதிகளில் உள்ள பொதுக்குழாய்களில் இருந்து ஒரு சிலர் தனியாக குழாய் போட்டு தங்களுடைய வீடுகளுக்கு நேரடியாக தண்ணீர் எடுத்து வந்தனர். இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வீதிகளில் அமைக்கப்பட்டிருந்த 6 பொதுக்குழாய்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி மேல்நிலை குடிநீர் தொட்டியின் கீழ் பகுதியில் புதிதாக 5 பொதுக்குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து மேல்நிலை குடிநீர் தொட்டி இருக்கும் பகுதிக்கு நடந்து சென்று குடிநீர் எடுத்து வந்தனர். இதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது. எனவே மீண்டும் வீதிகளில் பொதுக்குழாய் அமைத்து குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரும்பபாளையம் பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். எனினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் குரும்பபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அங்குள்ள வெள்ளித்திருப்பூர்- குருவரெட்டியூர் ரோட்டுக்கு நேற்று காலை 9.30 மணி அளவில் வந்தனர். பின்னர் அவர்கள் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அந்தியூரில் இருந்து சென்னம்பட்டி நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சையும் சிறைபிடித்தனர்.

இதுபற்றி அறிந்ததும் அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அதிகாரி சுந்தரவடிவேல், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘வீதிகளில் பொதுக்குழாய் அமைத்து எங்களுக்கு குடிநீர் சீராக வினியோகம் செய்ய வேண்டும். மேலும் வீதிகளில் உள்ள பொதுக்குழாயில் இருந்து யாராவது முறைகேடாக தனி குழாய் அமைத்து தண்ணீர் எடுக்க முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். அதற்கு அதிகாரிகள் பதிலளிக்கையில், ‘குடிநீர் சீராக வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.

இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தாங்கள் சிறைபிடித்த அரசு டவுன் பஸ்சை விடுவித்ததுடன், சாலை மறியல் போராட்டத்தையும் 10.30 மணி அளவில் கைவிட்டனர். இதனால் வெள்ளித்திருப்பூர்- குருவரெட்டியூர் ரோட்டில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story