பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 March 2019 10:45 PM GMT (Updated: 5 March 2019 9:09 PM GMT)

தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை ஊழியர்கள் கடந்த சில நாட்களாக பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளும் கடந்த 2 நாட்களாக பணி புறக்கணிப்பு செய்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தாசில்தார், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் குருராகவேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் மூர்த்தி, செயலாளர் ரவிசந்திரன், பொருளாளர் சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஈரோடு மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ், பொருளாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட தலைவர் பாஸ்கர்பாபு நன்றி கூறினார்.

இதேபோல் சத்தியமங்கலம், பெருந்துறை, கொடுமுடி உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story