ராகுல்காந்தி பிரதமராக ஆதரவு அளிப்பேன் ஜனதா தளம்(எஸ்) எனது குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமான கட்சி அல்ல தேவேகவுடா பேட்டி
ஜனதா தளம்(எஸ்) எனது குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமான கட்சி அல்ல என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறினார்.
பெங்களூரு,
ஜனதா தளம்(எஸ்) எனது குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமான கட்சி அல்ல என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறினார்.
ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நிகில்கவுடா
ஜனதா தளம்(எஸ்) கட்சி, எனது குடும்பத்திற்கு மட்டும் சொந்தமான கட்சி அல்ல. நாடாளுமன்ற தேர்தலில் எனது பேரன்கள் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகு முடிவு எடுக்கப்படும்.
எனது பேரன் நிகில்கவுடா திரைத்துறையில் நடிகராக உள்ளார். அவர் மண்டியா தொகுதியில் சில கிராமங்களுக்கு சென்றபோது, இந்த தொகுதியில் போட்டியிடுமாறு வலியுறுத்தினர்.
மறைக்க விரும்பவில்லை
இதுபற்றி கட்சி முடிவு செய்யும் என்று நிகில்கவுடா கூறினார். மறைந்த நடிகர் அம்பரீசை அரசியலுக்கு அழைத்து வந்தவர் குமாரசாமி தான். அம்பரீஷ் என்னிடம் வந்து காங்கிரசுக்கு செல்வதாக கூறினார். நான் அவரை தடுக்கவில்லை.
அவரை வாழ்த்தினேன். நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நான் பேசுகையில், இங்கு இதுவே எனது கடைசி பேச்சு என்று குறிப்பிட்டேன்.
வாஜ்பாய் நிறைவேற்றவில்லை
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ஆட்சி பெரும்பான்மைக்கு 3 எம்.பி.க்கள் குறைவாக இருந்தனர். அவர் எனது ஆதரவை கேட்டார். ஆதரவு அளிக்க நான் ஒப்புக்கொண்டேன். வாஜ்பாய் ஆட்சியில் இந்தியா ஒளிர்கிறது என்றனர்.
ஆனால் பா.ஜனதா வெற்றி பெறவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை வாஜ்பாய் நிறைவேற்றவில்லை. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மனு கொடுத்தேன். அதை ஏற்று அந்த திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஊக்குவிக்கவில்லை
நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக நீங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் என்னிடம் கூறுகிறார்கள். ஆனால் நான் இன்னும் முடிவு எடுக்கவில்லை. அரசியல் வாழ்க்கையில் குடும்ப உறுப்பினர்கள் அரசியலுக்கு வருவதை நான் ஊக்குவிக்கவில்லை.
எனது மகன் எச்.டி.ரேவண்ணா அரசியலுக்கு வருவதை விரும்பவே இல்லை. நெருக்கடி நிலை காலத்தில் நான் பெங்களூரு சிறையில் இருந்தபோது, எச்.டி.ரேவண்ணா பெங்களூருவில் தொழில் தொடங்க திட்டமிட்டார்.
வெறுப்பாக பேசவில்லை
ஆனால் பிற்காலத்தில் அவர் அரசியலுக்கு வந்துவிட்டார். தேர்தலில் எனக்கு எதிராக பி.ஜி.ஆர்.சிந்தியாவை ராமகிருஷ்ண ஹெக்டே களம் இறக்கினார். அப்போதும் நான் யாரை பற்றியும் வெறுப்பாக பேசவில்லை.
பிற்காலத்தில் பி.ஜி.ஆர்.சிந்தியாவை போலீஸ் மந்திரியாக ஆக்கினேன். எனது இன்னொரு மகன் எச்.டி.குமாரசாமி சினிமாத்துறையில் பரபரப்பாக இருந்தார். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தான் அவரை அரசியலுக்குள் இழுத்து வந்தனர். சித்தராமையா, வீரேந்திரபட்டீல் ஆகியோரை எங்கள் கட்சியின் மாநில தலைவராக ஆக்கினேன்.
படுக்கையாக இருந்தேன்
இதுபற்றி சித்தராமையா சொல்லட்டும். எனது ேபரன் பிரஜ்வல் ரேவண்ணா பி.இ. படித்துள்ளார். எம்.டெக். படிக்கும்படி அறிவுறுத்தினேன். ஆனால் அதற்குள் அவர் அரசியலுக்குள் வந்துவிட்டார்.நான் கனகபுரா, பெங்களூரு புறநகர் ஆகிய தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தேன். எனது மகன் குமாரசாமி ராமநகரில் போட்டியிட்டு, தற்போது முதல்-மந்திரியாக இருக்கிறார். குமாரசாமி பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்திருந்தபோது, 4 மாதங்கள் நான் படுத்த படுக்கையாக இருந்தேன்.
வாக்குறுதியை நிறைவேற்றினாரா?
ரூபாய் நோட்டுகள் நடமாட்டம் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதாகவும், ஏழைகளின் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்வதாகவும் மோடி கூறினார். அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றினாரா?.
ஆனால் அவர் எதையும் செய்யவில்ைல என்று நான் சொல்ல மாட்டேன். தூய்மை இந்தியா என்ன புதிய திட்டமா?. அது எங்களுக்கு தெரியாதா?. தேசிய நெடுஞ்சாலை திட்டம் முந்தைய ஆட்சியிலேயே கொண்டு வரப்பட்டது தான்.
ஆதரவு அளிப்பேன்
வடகிழக்கு மாநிலங்களில் சாலை, மேம்பாலம் தனது ஆட்சியில் தான் கட்டப்பட்டது என்பது போல் பிரதமர் மோடி பேசுகிறார். நான் பிரதமராக இருந்தபோது ரெயில்வே, மின்சார திட்டங்களுக்கு அனுமதி வழங்கினேன். வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு நான் பதற்றமான சூழ்நிலையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்.
ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, மாயாவதி ஆகியோர் பிரதமராக விரும்புகிறார்கள். ராகுல்காந்தி பிரதமராக நான் ஆதரவு அளிப்பேன். ஏனென்றால் எனது மகன் குமாரசாமி முதல்-மந்திரியாக அவர் ஆதரவு வழங்கியுள்ளார்.
பாதுகாப்பு கவசம்
நிலையான ஆட்சி அமைந்தால் மட்டுமே வளர்ச்சி சாத்தியம் என்று மோடி பேசுகிறார். வாஜ்பாய் சிறப்பான ஆட்சியை நடத்தவில்லையா?, நான் பிரதமராக இருந்தபோது வளர்ச்சி திட்டங்கள் அமல்படுத்தவில்லையா?. மோடி அவ்வாறு பேசுவது சரியல்ல.
கார்கில் போர் நடந்தபோது, ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு கவசம் உள்ளிட்ட வசதிகள் இல்லை. அதன் பிறகு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லையா?. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் எங்கள் கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆதரவு வழங்குமாறு நான் கேட்கவில்லை.
மல்லிகார்ஜுன கார்கே
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபிஆசாத் என்னிடம் வந்து, குமாரசாமியை முதல்-மந்திரியாக்க விரும்புவதாக கூறினார். நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. மல்லிகார்ஜுன கார்கேயை முதல்-மந்திரி ஆக்குங்கள், ஆதரவு வழங்குகிறோம் என்று நான் சொன்னேன்.
ஆனால் காங்கிரஸ் மேலிட தலைவர் உறுதியாக சொன்னதால், குமாரசாமி முதல்-மந்திரியாக ஒப்புக்கொண்டேன். மோடி மீண்டும் பிரதமராக மாநிலங்களில் கூட்டணி அமைக்க போராடி வருகிறார். மக்களின் பார்வையில் அவரது புகழ் எந்த அளவுக்கு குறைந்துள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.
Related Tags :
Next Story